300 ரூபாய் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை!

307

சிவகங்கை, அக் – 29

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சித் தலைவராக 2002ஆம் ஆண்டு காலகட்டத்தில் பதவி வகித்தவர் ராணி ஆரோன்(64).
அதே ஆலங்குடி ஊராட்சிக்குட்பட்ட மேல மாகாணம் கிராமத்தில் வசித்து வந்தவர், கணபதி. இவர் தன்னுடைய வீட்டிற்கு குடிநீர் இணைப்புப் பெறுவதற்காக ஆலங்குடி ஊராட்சியில் தலைவராக இருந்த ராணி ஆரோனிடம் கோரிக்கை விடுத்தார்.
அப்போது கணபதியிடம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு, ராணி ஆரோன் ரூ.300 லஞ்சம் தரும்படி கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத கணபதி, இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகாரளித்தார்
பின்னர் அவர்கள் ஆலோசனையின்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட 300 ரூபாய் பணத்தை, ஊராட்சி மன்ற தலைவி ராணி ஆரோனிடம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக ராணி ஆரோனை கைது செய்தனர். அவர் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்
வழக்கு விசாரணையில், ராணி ஆரோன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதம் விதித்தும் நீதிபதி இன்ப கார்த்திக் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் புகார்தாரரான கணபதி மற்றும் சாட்சி கூறிய ராமசாமி ஆகிய இரண்டு பேரும் வழக்கு விசாரணையின்போது பிறழ் சாட்சிகளாக மாறினார்கள். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குத் தொடர்ந்து, நடவடிக்கையெடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here