
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ஊரில் இயற்கை வளங்களை சின்னாபின்னமாக்கிய கல்குவாரி அதிபர்கள்! அரசு விதித்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கல்குவாரி அதிபர்களுக்கு துணை போகும் புவியியல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள்…

எங்களை வாழ விடுங்கள் எனளபுலம்பும் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு
கோரிக்கை !
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் இராக்கத்தான்பட்டியில் கல்குவாரிகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உப்புநீராக மாறி சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்டு தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருவதா பொதுமக்கள் குற்றம் சாட்டி டிப்பர் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளத்தூர் தாலுகா குன்றனார்கோவில் கோவில் ஒன்றியத்தில் இராக்கத்தான்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தைச் சுற்றி உடையாளிபட்டி, சின்ன ஊரணிப்பட்டி, கொப்பம்பட்டி, தெம்மாவூர், கிள்ளு குளவாய்பட்டி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தனி நபருக்கு சொந்தமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கல்குவாரிகளில் அரசால் கொடுக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இந்த கல்குவாரிகள் இரவு பகலாக வைக்கப்படும் வெடிகளால் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்ப்படுவதுடன் குடிநீர் மாசுபட்டு உப்பு நீராக மாறி வருவதாகவும் இந்த உப்பு நீரால் அந்த கிராமத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனுக்கு சிறுநீரகத்தில் அதிக அளவில் உப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதேபோன்று இந்த பகுதியில் தொடர்ச்சியாக பொதுமக்கள் சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவதாகவும் உடனடியாக கல்குவாரிகளை இழுத்து மூடக்கோரி இராக்கத்தான்பட்டியில் டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மாமுண்டி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது..
குவாரி உள்ள இடத்தைச் சுற்றி விவசாய நிலங்கள், நீர் நிலைகள், வண்டிப் பாதை, குடியிருப்புகள், கோயில் அமைந்துள்ளன. வண்டிப்பாதை இருப்பதை மறைத்து சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் கல்குவாரிக்குள் இருக்கும் வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகள் இருப்பதை மறைத்துள்ளனர். குவாரி அனுமதிக்கு 40 வகையான ஆவணங்கள் வேண்டும். ஆனால், இவர்களோ 10 வகையான ஆவணங்களை வைத்து அனுமதி பெற முயற்சி செய்கின்றனர்..
விதிமுறை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள், சமூக செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…















