புதுக்கோட்டை நகரமன்ற முன்னாள் தலைவர் ராஜசேகரன், புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் ஆகியோர் கையில் அழகான ஒரு சிலையுடன் முதல்வர் காண ஆவலுடன் காத்திருக்க
சேம்பர் கதவைத் திறந்ததும் அந்த சிலையையும் அவர்களையும் பார்த்துவிட்ட முதல்வர் சில நொடிகள் ஸ்தம்பித்து… அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரைத் தாண்டி நின்ற புதுக்கோட்டை அதிமுக நிர்வாகிகளான நெவளிநாதன், ராஜசேகரன் ஆகியோரை கை காட்டி அழைத்தார்.
ராஜசேகரனும், நெவளிநாதனும் அருகே சென்றதும்… அவர்களையும் தன் அம்மாவின் அழகான வெண்கலைச் சிலையையும் பார்த்து மனம் உருகி நெகிழ்ந்துபோனார் முதல்வர் எடப்பாடி. சிலையை அவர்கள் முதல்வரிடம் கொடுத்து வணங்கினர். அந்த சிலையில், ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ என்று எழுதப்பட்டிருந்தது.
‘நல்ல நாள்ல கொடுத்திருக்கீங்க. நல்லா செஞ்சிருக்கீங்க. ரொம்ப சந்தோசம்’ என்று சொல்லியிருக்கிறார் முதல்வர். காரணம், அன்றுதான் முதல்வரின் தாயார் மறைந்து முப்பதாவது நாள். அந்த நாளில் மீண்டும் தன் தாயே தன்னைத் தேடி வந்துவிட்டார் என்ற அளவுக்கு முதல்வரின் முகத்தில் மாஸ்க்கையும் மீறி பூரிப்பும், நெகிழ்வும் தெரிந்தது. கொஞ்ச நேரம் தன் அம்மாவின் சிலையை பார்த்துக் கொண்டிருந்தவர் குடும்பத்தினரைக் கூப்பிட்டு, ‘ பத்திரமா பூஜை அறையில கொண்டு வைங்க’ என்று கூறினார்.
பின்பு ராஜசேகரனிடமும், நெவளிநாதனிடமும், ‘எங்க செஞ்சீங்க… ரொம்ப நல்லா இருக்கு. நமக்கு நல்லதே நடக்கும். நம்பிக்கையா இருங்க.நல்லா வேலை பாருங்க’ என்று சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறார். அடுத்தடுத்து பலர் வந்து சென்றபோதும் அவ்வப்போது பூஜை அறைக்குச் சென்று தன் அம்மாவின் சிலையை பார்த்து வந்தபடியே இருந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
இது குறித்து பேசிய நெவளிநாதன்
“இந்த சிலையை முதல்வரிடம் கடந்த 22 ஆம் தேதி அவர் புதுக்கோட்டை வந்திருந்தபோதே நாங்கள் கொடுத்திருக்க வேண்டியது. ஆனால் அப்போது இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான் கொரோனா தொற்றால் சிகிச்சையில் இருந்ததாலும் , விழா மேடைக்கு சென்று வழங்கும் வாய்ப்பு இல்லாத காரணத்தாலும் , சாலையில் வைத்து கொடுக்க கூடாது என்பதற்காக தவிர்த்துவிட்டோம்.
முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜசேகரன் தலைமையில் முதல்வருக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு கொடுத்தோம். எங்கள் வரவேற்பை பார்த்த முதல்வர் தன் வாகனத்தை நிறுத்தி நகர்மன்ற தலைவரின் பூங்கொத்தை பெற்றுகொண்டு எங்களிடம் அன்பாக பேசி சென்றார் அதன் பிறகு முதல்வர் அரசு நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டதால் தீபாவளியை ஒட்டி முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது தன் தாயாரின் சிலையை கண்ட முதல்வர் சில வினாடிகள் உணர்சியோடு காணப்பட்டார் , அதன் பிறகு எங்களை அழைத்து சிலையை பெற்றுகொண்ட முதல்வர் நல்ல நாளில் கொடுத்து இருக்கின்றீர்கள் , மிகவும் தத்ரூபமாக இருக்கிறது என மகிழ்ந்தார் முதல்வர்” என்று நெகிழ்ந்தார் நெவளிநாதன்..