இதற்கான நிதி ஆதாரம் குறித்து இறுதி செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகும்
ரூ.4,000 நிவாரணத்தை அடுத்து சிறப்பு தொகுப்பு வழங்க ஆலோசனை
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இவர் அரிசி ரேஷன் கார்டுகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும் என்ற உத்தரவில் முதல் கையெழுத்திட்டார். முதல்கட்டமாக ரூ.2,000ஐ இம்மாதமே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த திங்கட்கிழமை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
வரும் 15ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் வழங்கப்படும். இந்நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக தொழிலாளர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், ஏழை மக்கள் உள்ளிட்டோர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ரேஷனில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ரேஷன் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு முதல் அலை சற்று தணிந்து முடங்கிய தொழில்கள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பின. ஆனால் நடப்பாண்டின் இரண்டாவது அலை மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினக்கூலி தொழிலாளர்கள் பலரின் நிலை மிக மோசமாக உள்ளது. அவர்களின் குடும்ப செலவை குறைக்க அரிசி ரேஷன் கார்டுகளுக்கு சமையலுக்கு தினசரி பயன்படுத்தும் 10 முதல் 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவது தொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை பரிசீலித்து வருகிறது.
இதில் என்னென்ன பொருட்களை வழங்குவது, எத்தனை மாதம் வழங்குவது உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதி ஆதாரம் குறித்து இறுதி செய்யப்பட்டவுடன் அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அரிசி கார்டுகளுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு அடுத்த சில மாதங்களுக்கு கிடைத்தால் தமிழக மக்கள் பெரிதும் பயன்பெறுவர். அதிலும் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.