மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் இ பாஸ் நடைமுறைக்கு தளர்வு அளித்திருப்பது சுகாதாரத்துறைக்கு சவாலானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எஸ் பி வேலுமணி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் 8 ஆயிரத்து 532 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தைப் பொருத்தவரை குணமடைவோரின் விகிதம் 78 சதவீதமாக உள்ளது. கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 100 மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி பகுதிகளில் 6112 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதில் 1902 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 5 ஆயிரத்து 821 படுக்கை வசதிகள் உள்ளது. தேவையெனில் கொரோனா பரிசோதனை மற்றும் படுக்கை வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தமிழகத்தில் கொரோனா தொற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஒரிரு வாரங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைன் மற்றும் குறுங்செய்தி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு இ பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார துறையினருக்கு சாவலானது. தனியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் நோட்டீஸ் வழங்கப்படும். தமிழ்நாட்டில் 25 சித்தா மருத்துவ மையங்களில் அறிகுறி இல்லாமல் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு சித்தா மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும். கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க இணை நோய்கள் மற்றும் பிற நோய்கள் இருப்பதே காரணம் இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.