மதுரை: மதுரை – நத்தம் இடையில் அமைக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் மதுரை – திண்டுக்கல் இடையிலான பயண நேரம் பெருமளவில் குறையும் என்று நம்பப்படுகிறது.
பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மதுரை தல்லாக்குளம் ஐ.ஓ.சி அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வரையிலான 35 கி.மீ தூர சாலை ரூ.1,028 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.இதற்கான பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக மதுரை தல்லகுளத்தில் இருந்து ஊமச்சி குளத்தில் உள்ள மாரணிவிலக்கு வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.612 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வந்தன.
நவீன முறையில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்ட இந்த பறக்கும் மேம்பாலத்துக்கு வலுவான அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, 150 அடிக்கு ஒரு தூண் என்ற அடிப்படையில் மேம்பாலத்தை தாங்கிப் பிடிக்கும் வகையில் 268 ராட்சத தூண்கள் கட்டப்பட்டன. அதை தொடர்ந்து தூண்களுக்கு இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் கான்கிரீட் கார்டர்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
இதற்கென தனியாக பணிமனை அமைக்கப்பட்டு துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அந்த கான்கிரீட் கார்டர்கள் கிரேன் மூலம் தூக்கில் மேலே நிலைநிறுத்தப்பட்டன. அவை ஒவ்வொன்றையும் கான்கிரீட் மற்றும் இரும்பு மோல்டுகளை கொண்டு இணைத்தனர்.
சாலை, சாலை தடுப்பு பணிகளும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாலத்திற்கு கீழ் ஒவ்வொரு தூணுக்கும் இடையே எல்.இ.டி விளக்குகள் மற்றும் தூணை சுற்றி 4 திசைகளிலும் சிறிய எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்படுகின்றன. ஊமச்சிகுளம், திருப்பாலை, அய்யர் பங்களா பகுதிகளில் நடைபயிற்சி மேடை, பூங்காக்கள், விவசாயி சிலை, சிறுவர்களை கவரும் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
மதுரை – நத்தம் 4 வழிச்சாலையை தொடர்ந்து திருச்சி – துவரங்குறிச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இவை பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்த மேம்பாலம் வழியே சென்றால் திருச்சி – மதுரை இடையிலான பயண தூரம் 24 கி.மீ குறையும். இதன் மூலம் மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்வோருக்கான பயண தூரமும் குறையும்.
அதேபோல் திருச்சியுடன் திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் சிட்டம்பட்டி – வாடிப்பட்டி இடையே 4 வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. இதுவும் பயன்பாட்டுக்கு வந்தால், இதனை மதுரை மக்கள் போக்குவரத்துக்காக அதிகளவில் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் திண்டுக்கல் மதுரையில் இடையேயான பயண தூரமும் குறையும் என்று கூறப்படுகிறது.
7.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மேம்பாலம்தான் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான வாகன போக்குவரத்துக்கு பயன்படும் மேம்பாலம் என்ற பெருமையை பெற்று உள்ளது. பாலத்தின் பணிகள் பெருமளவில் முடிந்துவிட்டதை தொடர்ந்து இம்மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்திலோ இது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.