புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 264 நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன..
இதில் மாவட்ட முழுவதும் சுமார் 1,05000 த்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்…
தற்போது இந்தாண்டு மாணவ சேர்க்கை மாவட்ட முழுவதும் தனியார் பள்ளிகளில் ஜரூராக நடைபெற்று வருகிறது..
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மறைமுகமாக சுமார் 20% முதல் 30% கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது..
புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள், எங்கே இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், எவ்வளவு தொகையை கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுகிறதோ, அவ்வளவையும் கட்டிவிடுகின்றனர். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் பெற்றோர்கள்தான் ஓரளவு புகார்களை வெளியில் சொல்கின்றனர்.
இதற்கிடையே 25% இட ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் குளறுபடிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
கல்விக் கட்டண வசூல் பின்னணி என்ன?
வெளிப்படைத்தன்மையில்லை
முந்தைய ஆண்டின் கட்டணம் என்றாலும், அதனை பெற்றோர்கள் எப்படி அறிவது? பள்ளிகள் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் அறிவிக்க வேண்டும் என்பது அரசின் வலியுறுத்தலாக இருந்தாலும், அதனை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா? அது பள்ளிக் கல்வித் துறையால் கண்காணிக்கப்படுகிறதா? போன்ற கேள்விகளுக்கு பதிலே கிடைப்பதில்லை. பதில் கிடைக்காதது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல ஊடகங்களுக்கும் கிடைப்பதில்லைதான்.
யாரிடம் புகார் கூறுவது?
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், யாரிடம் புகார் கூறுவது என்பதே தெரியவில்லை என்கின்றனர் பெற்றோர்கள். அப்படியே தெரிந்த அறிந்தவர்களிடம் கேட்டு முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் கூறினாலும், மிஞ்சிப்போனால் ஒரு ரெய்ட் நடக்கும், அதற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்றவை புகார் தெரிவித்தவருக்கே தெரிவில்லை என்கின்றனர் பெற்றோர்கள். புகார் தெரிவித்தால் ஏதேனும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தால்தானே பெற்றோர்கள் புகார் தெரிவிக்க முன்வருவார்கள்? கட்டணம் வசூலிக்கத் துணியும் பள்ளி நிர்வாகங்களும் அச்சப்படுவர்?
தனியார் பள்ளிகளின் நிலை என்ன?
சில தனியார் பள்ளிகள், ஆசிரியர்களின் வேலைப் பழுவை இருமடங்காக்கி, ஊதியத்தை பாதியாக்கி இருக்கின்றன. இதனால் பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய ஆசிரியர் பணியை விடுத்து வேறு துறைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
கட்டண நிர்ணயக் குழுவை மேம்படுத்த வேண்டும். அதன் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். அக்குழு நிர்ணயிக்கும் கட்டணம் இணையதளத்திலோ, வேறு வழிகளிலோ பெற்றோர்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். பெற்றோர்களின் புகார்கள் விசாரிக்கப்பட்டு, தவறு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும். அங்கீகார ரத்து செய்ய வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கையோடு அந்த நடவடிக்கை நின்றுவிடக் கூடாது. கட்டண நிர்ணயம் என்பதும் தனியார் பள்ளிகளின் தரப்பு மட்டுமின்றி பெற்றோர்களின் கருத்துக்களுக்கு பிறகு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தனியார் பள்ளி சரி இல்லை என்றால் அரசுப் பள்ளிக்கு செல்ல வேண்டியதுதானே என்ற வேள்வி எழலாம். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது நல்லதுதானே எனத் தோன்றலாம். ஆனால், அரசுப் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் நகர்வது நம்பிக்கையின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, கட்டாயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.