சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி இரண்டாவது மகன் தனுஷ்(19). இவர் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில் இந்தாண்டு இன்று மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்தார். அவருக்கு மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத தேர்வு நுழைவுச் சீட்டு வந்துள்ளது. நேற்று சனிக்கிழமை தனது நண்பர்களிடம் நீட் தேர்வில் மூன்றாவது முறையும் தேர்ச்சி பெறாவிட்டால் தனது மருத்துவர் கனவு கலைந்து போகும் என்று கூறி வந்துள்ளார்.
இதனால் தனது கனவு லட்சியமாக சனிக்கிழமை நள்ளிரவு வரை வீட்டில் தனது அறையில் படித்துக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் வேறு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது தாயார் சிவஜோதி எழுந்து பார்த்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அறிந்து குடும்பத்தினர் கதறி அழுதனர். கிராமமே அங்கு கூடியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், அந்த தேர்வில் பங்கேற்க இருந்த விவசாயி மகன் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.