பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்பும் சசிகலா, சென்னையில் உள்ள அண்ணன் மகளின் வீட்டில் தங்குகிறார்.
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, நாளை தமிழகம் திரும்புகிறார். சாலை மார்க்கமாக சென்னை வர இருக்கிறார். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனது அண்ணண் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் சசிகலா தங்குகிறார். அவர் தங்குவதற்காக, அந்த வீட்டில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சசிகலா சிறையில் இருந்தபோது 2 முறை பரோலில் வெளியே வந்தார். தனது கணவர் நடராஜன் மருத்துவமனையில் இருந்தபோது சென்னையிலும், அவர் மறைந்தபோது கணவர் நடராஜனின் உடலை சொந்த ஊரிலும் பார்த்தார். பரோலில் வந்ததால் குடும்பத்தினர் தவிர வேறு யாரையும் சந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் விதித்திருந்தனர். தற்போது தண்டனை முடிந்துவிட்டதால், தியாகராய நகரில் உள்ள வீட்டில், கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திப்பதற்காக வீட்டின் முகப்பு வாயிலில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.