தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்… கடந்து வந்த பாதை!

166

தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்…

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறை துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது அவரின் மகன் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் தற்போது, 14 மாநிலங்களில், 23 பேர் துணை முதல்வர் பொறுப்பு வகிக்கின்றனர். 24-வது நபராக உதயநிதி இணைந்திருக்கிறார். அவர் கடந்துவந்த பாதை குறித்தும், துணை முதல்வர் பொறுப்புக்கான அதிகாரங்கள் என்னென்ன என்பது குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.

உதயநிதி ஸ்டாலின் கையாண்ட பிரச்சார யுக்தி..
2012-ல் இயக்குநர் ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிகராக அறிமுகமான உதயநிதி, தொடர்ச்சியாக பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார். தொடர்ந்து, 2018-ல் தீவிர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டங்களில் மிகத் தீவிரமாக கலந்துகொண்டார்

தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 39 தொகுதிகளில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். அவரின் பிரசார யுக்தி நன்றாக எடுபட்டது. தன்னுடைய இயல்பான பேச்சால், உரையாடல்களின் வழியாக மக்களை அணுகிய விதம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தேர்தலில், திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 38 இடங்களில் வெற்றிபெற உதயநிதின் பிரசாரம் முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி..
அதனைத்தொடர்ந்து, ஜூலை 4-ம் தேதி அவர் திமுக இளைஞரணிச் செயலாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு இளைஞரணியின் செயல்பாடுகள் வேகமெடுத்தன.

தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட அவர், 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிபெற்றார். அப்போது அமைந்த திமுக அமைச்சரவையில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை

2022 டிசம்பர் 14-ம் தேதியில், தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி அறிவிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக உதயநிதியைத் துணை முதல்வராக்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் தொடங்கி பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். முதல்வரும் அந்தக் கோரிக்கை வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை என பதிலளித்திருந்தார். இந்தநிலையில், இன்று தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருக்கிறார்

தமிழ்நாட்டில் 3வது துணை முதலமைச்சர்..
தமிழ்நாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக துணை முதல்வராகப் பதவியேற்கும் மூன்றாவது நபராக உதயநிதி பதவியேற்கிறார்.

இந்தியாவில் முதன்முதலில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், பீகார் மாநிலத்தைச் சேந்த அனுராக் நாராயணன் சின்கா. அவர் 1937 முதல் 1939 வரையிலும், 1946 -1952 வரையிலும் பீகாரின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

ஆந்திரப் பிரதேசத்தின் நீலம் சஞ்சீவ ரெட்டி, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, கர்நாடகத்தின் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜே.ஹெச்.பட்டேல், சித்தராமையா, எடியூரப்பா, பிகாரின் சுஷீல் குமார் மோடி, குஜராத்தின் கேஷுபாய் பட்டேல் என பல முக்கிய தலைவர்கள் துணை முதல்வராகப் பதவி வகித்திருக்கின்றனர்.

தற்போது, ஆந்திரா தொடங்கி உத்தரப் பிரதேசம் வரையிலும் 14 மாநிலங்களில் 23 பேர் துணை முதல்வராகப் பொறுப்பு வகிக்கின்றனர். அதில், ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இரண்டு பேர் துணை முதல்வராகப் பொறுப்பு வகிக்கின்றனர். ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில், ஐந்து பேர் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நம் அண்டை மாநிலங்களான, கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார், ஆந்திராவில் பவன் கல்யாண், தெலங்கானாவில் மல்லுபட்டி விக்ரமார்கா துணை முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

துணை முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164வது பிரிவு ஆளுநரின் அதிகாரம் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட மாநில அமைச்சர்களை நியமிக்கும் செயல்முறையை விவரிக்கிறது. இதில் துணை முதல்வர் பொறுப்பு குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கேபினட் அமைச்சருக்கு இணையாக மதிக்கப்படக் கூடிய பொறுப்பாக துணை முதல்வர் பதவி இருக்கிறது.

அதேவேளை, “பல மாநிலங்களில் இரண்டு மூன்று கட்சிகள் சேர்ந்து கூட்டணி அரசு அமையும்போது, கூட்டணிக் கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படுவது வழக்கம். ஒருசில மாநிலங்களில் கௌரவப் பதவிக்காக அந்தப் பொறுப்பு வழங்கப்படும். துணை முதல்வர் பதவிக்கென்று அரசியலமைப்பில் தனித்த அதிகாரம் இல்லாவிட்டாலும், அந்தப் பதவியில் அமரும் நபரைப் பொறுத்து பொதுவெளியில் அதற்கான மதிப்பு இருக்கும்’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here