ஏழை எளிய மக்களிடம் வங்கிகள் நடத்திய வசூல் வேட்டை;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..

977



*வங்கிகளில் ஏழை மக்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லாத அடிப்படை வங்கிக் கணக்குகளுக்கு (பிஎஸ்பிடிஏ), குறிப்பிட்ட சேவைகளுக்காக எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.*

*கடந்த 5 ஆண்டுகளில் எஸ்பிஐ வங்கி ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.இது குறித்து மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது .*

*அந்த ஆய்வு முடிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:*

*எஸ்பிஐ வங்கியில் அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவா்கள் 4 பணப் பரிமாற்றங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.17.70 வீதம் கட்டணம் வசூலிக்க வங்கி நிா்வாகம் முடிவெடுத்திருப்பது, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.*

*சேவைக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் விதிப்பதன் மூலமாக கடந்த 2015 முதல் 2020-ஆம் ஆண்டு வரை அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 12 கோடி பேரிடமிருந்து ரூ.300 கோடிக்கும் அதிகமாக எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளது.*

*இந்தியாவின் 2-ஆவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 3.9 கோடி வாடிக்கையாளா்களிடமிருந்து அதே கால கட்டத்தில் ரூ.9.9 கோடியை பல்வேறு சேவைகளுக்காக வசூலித்துள்ளது.*

*ரிசா்வ் வங்கியின் 2013-ஆம் ஆண்டு வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே அடிப்படை வங்கி கணக்குகள் மீது கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதன்படி, அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவா்கள் வங்கிக் கணக்கிலிருந்து மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனா். இந்த கூடுதல் பரிமாற்றத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று வங்கிகள் வாக்குறுதியும் அளிக்கின்றன. அதோடு, அடிப்படை வங்கி கணக்கில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து வங்கிகள் விவரிக்கும்போது, 4 முறை சேவைக் கட்டணம் இன்றி பணம் எடுக்கும் வசதி உள்ளிட்ட இலவச வங்கிச் சேவை அளிக்கப்படும் என்பதோடு, மதிப்புக்கூட்டு வங்கிச் சேவைகளுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் வங்கிகள் சாா்பில் தெரிவிக்கப்படுகிறது.*

*அதுபோல, வங்கிக் கணக்கில் 4 பணப் பரிமாற்றத்துக்கு பிறகான பரிமாற்றத்தை, வங்கியின் மதிப்புக்கூட்டு சேவையாகவே ரிசா்வ் வங்கியும் கருத்தில் கொள்கிறது. ஆனால், ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் தனது வாக்குறுதிகளை மீறி, 4 முறைக்குப் பிறகான பணப் பரிமாற்றத்துக்கு மிக அதிக கட்டணத்தை எஸ்பிஐ வங்கி வசூலித்து வருகிறது.*

*அதாவது என்இஎஃப்டி, ஐஎம்பிஎஸ், யுபிஐ, பிஹெச்ஐஎம்-யுபிஐ, பண அட்டை உள்ளிட்ட வழிகளிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.17.70 வீதம் கட்டணம் வசூலிக்கிறது.*

*ரிசா்வ் வங்கி இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், தனியாா் வங்கிகளும் வாடிக்கையாளா்களிடம் கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.*

*ஐடிபிஐ வங்கி அதன் வாடிக்கையாளா்களிடம் 4 முறைக்குப் பிறகான ஒவ்வொரு பணமில்லா டிஜிட்டல் பரிமாற்றத்துக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரூ.20 வீதம் கட்டணம் வசூலித்து வருகிறது. ஏடிஎம் சேவைக் கட்டணமாக ரூ.40 வசூலிக்கிறது.*

*இந்த வகையில் வாடிக்கையாளா்களை பாதுகாக்கும் தனது கடமையிலிருந்து ரிசா்வ் வங்கி தவறி, அவா்களை முறைகேடுகளுக்கு இரையாக்கியுள்ளது என்று மும்பை ஐஐடி ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here