ஆனைமலை விடுதி உரிமையாளரிடம் ரூ.1¾ கோடியை சுருட்டிய கேரள மோசடி மன்னன் கைது

904

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 67). இவர் தனக்கு சொந்தமான சொகுசு விடுதியை கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த ஷாஷகான் என்பவருக்கு ரூ.4 கோடியே 35 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. அதில் ரூ.3 கோடியே 35 லட்சத்தை சிங்காநல்லூரில் உள்ள ஒரு வங்கி கிளையில் தனது கணக்கில் போட்டு வைத்திருந்தார். அந்த தொகையில் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சமும், லாக்கரில் இருந்து ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தையும் எடுப்பதற்கு முத்துகிருஷ்ணன் வங்கிக்கு கடந்த 2-ந் தேதி சென்றார். அப்போது சொகுசு விடுதிக்கு கடந்த ஓராண்டாக வந்து போகும் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அனுப்குமாரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. வங்கியில் பணத்தை எடுத்து விட்டு திரும்பு போது இரவு நேரமாகி விட்டதால் அனுப்குமார் ரூ.1 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரத்தை மறுநாள் 3-ந்தேதி காலையில் கொண்டு வந்து கொடுப்பதாக கூறி வாங்கி சென்றதாக தெரிகிறது. இதையடுத்து முத்துகிருஷ்ணனை சொகுசு விடுதியில் இறக்கி விட்டு விட்டு அனுப்குமார், கார் டிரைவர் மற்றும் வேறு ஒருவருடன் சென்று விட்டார். ஆனால் மறுநாள் அனுப்குமார் பணத்தை கொண்டு வந்து கொடுக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் முத்துகிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக கடந்த 15-ந் தேதி கேரளா மாநிலம் ஆலாப்புழையை சேர்ந்த சதீஷ் (30), மலப்புரத்தை சேர்ந்த சின்ஜித் (24), எர்ணாகுளத்தை சேர்ந்த மனோஜ் (30), அதே பகுதியை சேர்ந்த பிலால் (25), காசர்கோட்டை சேர்ந்த சசிகாந்த் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மற்றும் 5 கத்திகள், ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா உத்தரவின் பேரில் டி.ஐ.ஜி. நரேந்திரன்நாயர், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோரது மேற்பார்வையில் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியம், மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமி பாண்டியன், உதயசந்திரன், ராஜேந்திரபிரசாத், கவியரசு மற்றும் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கேரளாவில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கிழவன்புதூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமி பாண்டியன், சந்திரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்தனர். அப்போது காரை நிறுத்திய நபர் திடீரென்று போலீசாரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு, தப்பி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் காரை துரத்தி சென்றனர். மேலும் செம்மனாம்பதி சோதனைச்சாவடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு போலீசார் துப்பாக்கி முனையில் காரில் இருந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அனுப்குமார் (31) என்பதும், அவர், சொகுசு விடுதி உரிமையாளரிடம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டுதல், மோசடி, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுப்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 சொகுசு கார்கள், ஒரு நாட்டு துப்பாக்கி, 3 புல்லட், ரூ.40 லட்சத்து 55 ஆயிரம், 50 பவுன் நகை, விலை உயர்ந்த 4 செல்போன்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கேரள மோசடி மன்னனை பிடித்த தனிப்படை போலீசாருக்கு ஐ.ஜி.பெரியய்யா மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here