மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்
● புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நவீன சிகிச்சை அளித்து, நோயாளிகள் குணமடைய ஏதுவாக்கும் இந்த புதிய பிரிவை திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான சூர்யா திறந்து வைத்தார்.
● புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை, மருந்துகள் மூலம் சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான இரத்தப் புற்றுநோய் சிகிச்சை என அனைத்து சிகிச்சை வழிமுறைகளும் ஒரே இடத்தில் இம்மையத்தில் வழங்கப்படும்.
மதுரை, ஏப்ரல் 26, 2026: புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஒரு முக்கிய முன்னேற்ற நிகழ்வாக, ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவை மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது முதல், நவீன சிகிச்சைகள் மற்றும் நீண்ட கால சிகிச்சை வரை அனைத்தும் ஒரே அமைவிடத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான திரு. சூர்யா இந்தப் புதிய பிரிவைத் திறந்து வைத்தார். இந்த விழாவில் டாக்டர் S. குருசங்கர், திருமதி. காமினி குருசங்கர், கதிர்வீச்சு புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் கிருஷ்ண குமார், மருத்துவப் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் ரத்னம், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் விஜய பாஸ்கர், குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் காசி விஸ்வநாதன் மற்றும் நியூக்ளியர் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் CNB ஹரிசங்கர் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புதிய பிரிவைத் திறந்து வைத்தார்.
தென் தமிழகத்தில் முதலாவதாக நிறுவப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தில் Medical Oncology, Radiation Oncology, Surgical Oncology மற்றும் குழந்தைகளுக்கான இரத்தப் புற்றுநோய்களுக்கான சிகிச்சை மற்றும் அனைத்து சிகிச்சைகளும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகின்றன.
அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட மருத்துவர்களால் கீமோதெரபி, இம்யூனோதெரபி, டார்கெட்டட் தெரபி மற்றும் வலி நிவாரண சிகிச்சை போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், பக்கவிளைவுகளைக் குறைத்து துல்லியமாக சிகிச்சை அளிக்க ‘டோமோதெரபி’ போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், ரோபோடிக் சாதன உதவியுடன் அறுவை சிகிச்சை வசதியும் இங்கு இருப்பது இம்மையத்தின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.
டாக்டர் குருசங்கர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சைக்காக தொலைதூரத்தில் உள்ள பெருநகரங்களுக்குச் செல்வதை தவிர்த்து, அவர்களுக்கு இங்கேயே உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் புதிய ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் இம்மையம், ஒவ்வொரு நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்ப பிரத்யேக சிகிச்சைத் திட்டங்களை வடிவமைத்து வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் நோயாளிகள் குணம் பெறுவதையும், நீண்ட காலம் வாழ்வதையும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். பாதுகாப்பு, துல்லியமான சிகிச்சை மற்றும் பல்துறை மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த சிகிச்சை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், முதியவர்கள் உட்பட அனைத்து வயதினருக்கும் அவர்களின் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காலம் முழுவதும் முழுமையான ஆதரவையும், சிகிச்சையையும் வழங்க இந்த மையம் அனைத்து வசதிகளுடன் தயாராக உள்ளது.”
புற்றுநோயின் நிலையைத் துல்லியமாக அறிய PET சிடி ஸ்கேன் மற்றும் பிரத்யேக இமேஜிங் வசதிகள் இங்கு உள்ளன. மேலும், லினாக் (LINAC) அடிப்படையிலான கதிர்வீச்சு சிகிச்சை, Brachytherapy மற்றும் முழுமையான பரிசோதனை வசதிகளும் இங்கு கிடைக்கின்றன. மீனாட்சி லேப்ஸ் மூலம் வழங்கப்படும் மிகத் துல்லியமான ஹிஸ்டோபெத்தாலஜி (நுண் திசுநோயியல்) சேவைகள், புற்றுநோய் திசுக்களை ஆழமாக ஆய்வு செய்து சரியான நோயறிதலை உறுதி செய்கின்றன. இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறை, புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவது முதல் மேம்பட்ட, பிரத்யேக சிகிச்சை அளிப்பது வரை அனைத்தையும் தடையின்றி ஒருங்கிணைத்து, நோயாளிகளின் உடல்நலம் மேம்பட வழிவகுக்கிறது.















