கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவினர் தீப்பந்தங்கள் ஏந்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவையில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கியால் காலில் சுட்டு கைது செய்தனர். இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் இகாப செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” கோவை விமான நிலையம் பின்புறம், பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 தனி படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அறிவியல் ரீதியான ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சதீஷ், கார்த்தி சிவகங்கை மாவட்டம் சார்ந்தவர்கள், குணா மதுரை சேர்ந்தவர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. வாகன திருட்டு வழக்கு உள்ளது. 3 பேர் இருகூர் சேர்ந்தவர்கள், மது அருந்திவிட்டு காரின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். சதீஷ் (30), குணா (20), கார்த்தி (21), மூன்று பேரும் திருமணம் ஆகாதவர்கள். சம்பவம் எதார்த்தமாக நடந்துள்ளது. கையில் அரிவாள் வைத்து உள்ளனர். கோவில்பாளையம் பகுதியில் வாகன திருட்டில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 300 சிசிடிவி காட்சிகள் பார்க்கப்பட்டு உள்ளது. அண்ணன் தம்பி இருவரும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குற்ற சம்பவம் முழுக்கு முழுக்க மது போதையில் நடைபெற்று இருப்பதாக தகவல் தெரிகிறது. கோவில்பாளையத்தில் ஒரு வீட்டில் சாவியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு மூவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் அரிவாள் இருந்துள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டி உள்ளது. அதனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்களை வெளியிட முடியாது. வெளியிட வேண்டாம். திருமுருகன்பூண்டி பகுதியில் குற்றவழக்கு பதிவாகியுள்ளது. 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை சீராக உள்ளார். அவருக்கு உளவியல் சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளது. கிடைக்கும் வேலைகளில் இந்த நபர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 10.45.முதல் 11 மணிக்குள் மூவரும் பிடிபட்டனர். பாதிக்கப்பட்ட இருவர் மீதும் எவ்வித குற்றமும் பதிவு செய்யப்படவில்லை. குண்டர் சட்டம் பதிவு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடந்த இடத்தை அடிக்கடி போலீசார் ரோந்து சென்றுள்ளனர். சம்பவத்தன்று அப்பகுதிக்கு போலீசார் செல்லவில்லை. மூவரும் குற்ற சம்பவத்திற்கு பிறகு பல இடங்களுக்கு சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டி வருகிறோம். மூவரும் கூலிப்படையை சேர்ந்தவர்களா என்பது குறித்து அடுத்த விசாரணையில் தான் தெரியவரும். பல இடங்களில் பொதுமக்கள் அமைத்திருந்த சிசிடிவிக்கள் வேலை செய்யவில்லை – அதனை மக்கள் சரிபார்த்து வைத்துக்கொள்ள கோரிக்கை. சம்பவம் நடந்த நேரம் 10.40 – பாதிக்கப்பட்டவர் 100க்கு அழைத்தது 11.20க்கு – போலீஸ் 11.35க்கு சம்பவ இடத்திற்கு சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் சிறு புதரை தாண்டி இருந்ததால் கண்டறிய தாமதமாகிவிட்டது. சம்பவம் நடந்த இடம் யாருடையது என்பது குறித்து வருவாய்த்துறையினருடன் ஆலோசித்து வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் காவலன் ஆப் அறிமுகம் செய்தார் – அது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இது போன்ற அவசர நேரங்களில் பயன்படுத்த முடியும். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தனிநபர் கருத்துக்களை பதிவிட வேண்டாம். 100க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் – சுவர் இருந்த பகுதி கும்மிருட்டாக இருந்ததால் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டாது – பாதிக்கப்பட்ட பெண்ணே நேரடியாக வெளியே வந்தார். அந்தப்பகுதியில் செயல்பட்டு வந்த மதுபான பார் 2 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது. சம்பவ இடத்தில் ஆயுதங்கள் இருந்ததால் போலீசார் பயந்துவிட்டதாக கூறுவது தவறானது. நேற்று பாஜகவினர் அனுமதியின்றி தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தியது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது – விசாரணை நடைபெறுகிறது.” என்றார்.












