திருச்சி தினமணி நாளிதழ் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் கோபி (38). இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். திருச்சியில் உள்ள மேன்ஷனில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று அவருக்கு வார விடுமுறை. இதையொட்டி நண்பருடன் காரில் வெளியில் சென்றார். பின்னர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார். இவரது நண்பர் காரை ஓட்டினார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் காரில் இருந்த கோபியும், அவரது நண்பரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த சிறுகனூர் காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் கோபியின் திடீர் மரணம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.















