Site icon News now Tamilnadu

வாடிக்கையாளர்களிடம் ரூ.35 ஆயிரம் கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்!

கடந்த 5 ஆண்டுகளில் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்திருக்காததற்கு அபராதம், கூடுதல் ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் கோடியை வங்கிகள் வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

2018ம் ஆண்டு முதல் தற்போது வரை, கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்தஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகள், வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்திருக்காததற்கு வாடிக்கையாளரிடம் இருந்து அபராதமாக ரூ.21,044 கோடியும், கூடுதல் ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கு ரூ.8,289.3 கோடியும், எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கு ரூ.6,254.3 கோடி கட்டணமாக வங்கிகள் வசூலித்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏப்.,1, 2015 முதல் வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகையை பின்பற்றாத சேமிப்பு கணக்குகளுக்கு அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.

அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் ஆன்லைனில் அலெர்ட் வசதியை வங்கிகள் ஏற்படுத்த வேண்டும். நியாயமான தன்மையை உறுதி செய்வதற்காக, அத்தகைய கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

ஏ.டி.எம்.,பரிவர்த்தனையை பொறுத்தவரை, வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதத்தில் குறைந்தது 5 முறை ஏ.டி.எம்.,களில் பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம்.

மற்ற வங்கி ஏ.டி.எம்.,கள் எனில், மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.

கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Exit mobile version