Site icon News now Tamilnadu

ரூ.7.5 கோடி நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்; நேரில் சென்று வாழ்த்திய எம்.பி!

மதுரை மாவட்டத்தில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி பெண் ஊழியரை எம்.பி.வெங்கடேசன் வங்கிக்கே நேரில் சென்று வாழ்த்தினார்..

ஆயி பூரணம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆயி பூரணம் என்பவர் அப்பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு தனது ரூ.7.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “ஆயி பூரணம் அம்மாவின்னுடைய கைகளை பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை. அள்ளிக் கொள்வதற்கென்று நிறைய கைகள் உள்ளது? ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது!

நான் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடனையென நினைக்கிறேன்.
மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது.
சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் திரு. இராஜேந்திரன் அவர்கள் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார்.

இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறது. இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தை குணத்தை கொண்டாட வேண்டிய நேரம் இது அந்த வகையில் தான் பூரணம் அம்மாவை மதுரையின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன்” என்று நெகிழச்சிபட குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version