தமிழகம் முழுவதும் 30 இடங்களில், மணல் குவாரி முறைகேடு வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு வரை கூடுதலாக ஆற்று மணல் அள்ளியதன் மூலம் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
28 மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி ஊழல் என 2024 ஜூன் மாதம் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் புதிதாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடந்து வருகிறது. திண்டுக்கலில் மணல் குவாரி உரிமையாளர் ரத்தினம் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் பகுதியில் மணல் குவாரி உரிமையாளர் ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடந்தது. கறம்பக்குடியில் மணல் குவாரி உரிமையாளர் கரிகாலன் என்பவர் வீட்டிலும், ஏம்பல் பகுதியில் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி தலைமையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
திமுக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல்..
திமுக ஆட்சியில் நடந்த மணல் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அறப்போர் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கை; தமிழகம் முழுக்க 28 இடங்களில் சட்டவிரோதமாக 23 லட்சம் யூனிட் ஆற்று மணல் கொள்ளையடித்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்து இருந்தது. இந்த மணல் கொள்ளை நடந்ததற்கான புகார் மற்றும் கூடுதல் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கொடுத்திருந்தது.
கடந்த ஆட்சியில் அமைச்சர் துரைமுருகன் துறையில் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன், பொது ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இணைந்து செய்த மிகப்பெரிய கொள்ளை மற்றும் ஊழல் இது. அமலாக்கத்துறை ஆதாரங்கள் மற்றும் அறப்போர் இயக்கத்தின் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணையை முடித்து தற்பொழுது வழக்குப் பதிவு செய்து பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த ஊழலால் ஆயிரக்கணக்கான கோடி அரசுக்கு இழப்பும், மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பும், தமிழகத்திற்கு ஏற்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.















