தமிழகம் முழுவதும் கடும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சலை இன்றளவும் முறையாக பரிசோதிக்காமல், ‘மழைக்கால காய்ச்சல்’ என தட்டிக் கழித்து, கடந்த 1 மாதகாலமாக தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக சுகாதாரத் துறைக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும்
குழந்தைகள் துவங்கி முதியவர் வரை பரவி வரும் மர்மக் காய்ச்சலுக்கு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சுகாதாரத் துறை இது என்ன மாதிரியான காய்ச்சல்? எதனால் பரவுகிறது? காய்ச்சலுக்கு பிறகும் மக்களை வாட்டி வதைப்பது ஏன்? மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என எதைப்பற்றியும் கவலைப்படாமல் இவற்றையெல்லாம் மூடி மறைக்கின்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே, H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல், டெங்கு, இன்ப்ளூயன்சா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் பரவிய நிலையில், இப்போது, அண்டை நாடுகளில், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
உடனடியாக, தமிழக அரசு இதில் தலையிட்டு பரவி வரக்கூடிய மர்மக் காய்ச்சலை முறையான பரிசோதனை மேற்கொண்டு கண்டறிந்து, அது என்ன மாதிரியான காய்ச்சல் என்பதை மக்களுக்கு விளக்கி, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் மர்மக் காய்ச்சலுக்காக மக்கள்
அரசு, தனியார் மருத்துவமனைகளை நோக்கி அணி வகுக்கிறார்கள். ஆகவே, போர்க்கால அடிப்படையில் ‘சுகாதாரத்துறை செயல்பட வேண்டிய மிக உயரிய நேரமிது!’
மக்களை பதட்டமைடைய செய்யாமல்; காய்ச்சலை முறையாக பரிசோதித்து அவர்களின் நலனை காப்பது அரசின் கடமை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார்கள்!











