தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இணைந்தார்.

2

தவெகவில் இணைந்தார் சவுக்கு சங்கர் பேட்டியால் சிறைச்சென்ற யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு!

தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இணைந்தார். அவர் பனையூரில் விஜய்யை நேரில் சந்தித்து இணைந்துள்ளார். தற்போது சவுக்கு சங்கர் கைதாகியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார். மேலும் சவுக்கு மீது புகார் கொடுத்த தயாரிப்பாளரையும் பேட்டி எடுத்திருந்தார்.

தவெகவில் இணைந்தது குறித்து புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஜெரால்டு, “51 வயது நிரம்பிய நிலையில், நான் கடந்த 12 ஆண்டுகளாக வளர்த்தெடுத்த வணிகப் பொறுப்புகளிலிருந்து விலகி, அடுத்த தலைமுறைக்கான புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு இயக்கத்தில் இணைய முடிவு செய்துள்ளேன்.

தமிழகத்தின் எதிர்காலமாகவும், நம்பிக்கையாகவும் கருதப்படும் எனது முன்னாள் வகுப்புத் தோழரும், சகத் தோழருமான திரு. விஜய்யைச் சந்தித்தது மகிழ்ச்சி. “விஜய், இதை நாம் நிச்சயம் செய்து முடிப்போம்!” என்று பெலிக்ஸ் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பெண் காவலர்கள் குறித்த அவதூறு செய்தியை ஒளிபரப்பிய புகாரில் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெராலட்டை கடந்த ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி இரவு டெல்லியில் திருச்சி தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் கைதான பெலிக்ஸ் தமிழகத்திற்கு அழைத்து வரவில்லை. அவருக்கு உயிருக்கு ஆபத்து என பெலிக்ஸ் மனைவி கண்ணீருடன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அவர் மேலும் கூறுகையில், “என் கணவருக்கு போன் செய்த போதும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் போலீஸாருக்கு போன் செய்து என் கணவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். அப்போது திருச்சி என்றார்கள். உடனே ரயில் பிடித்து காலையில் செல்ல டிக்கெட் கிடைக்கவில்லை. அதன் பிறகு நான் பலமுறை என் கணவரின் நம்பருக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். மேலும் தனது வீட்டில் போலீஸார் அத்துமீறி நுழைந்து எதையோ தேடியதாகவும் கூறி அவர்களுடன் வாக்குவாதம் செய்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அவர் மீது கோவை போலீஸாரும் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. அதே நேரம் கோவை நீதிமன்றத்தில் இவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு பெலிக்ஸ் விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , கோவை டவுன்ஹால் காவல் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெலிக்ஸ் ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார். அவரது யூடியூப் சேனலில் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஜெரால்டு தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.