கிலோ கணக்கில் தங்கம், 31 ஏக்கர் நிலம், ரூ.100 கோடி சொத்து!
சாதாரண அரசு ஆபீஸரால் ஆடிப்போன ஹைதராபாத்.
வருமானத்திற்கு அதிகமாக ரூ.100 கோடிக்கு மேலாக சொத்து சேர்த்ததாக ஆந்திராவில் போக்குவரத்து துணை ஆணையருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒரு சாதாரண அரசு அதிகாரிக்கு இவ்வளவு சொத்துக்களா? எப்படி? என்று ஒட்டுமொத்த ஹைதராபாத்தும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.. என்ன நடந்தது?
மகபூப்நகர் மாவட்ட போக்குவரத்து துணை ஆணையராக இருப்பவர் கிஷான். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் கிளம்பின..
சாதாரண அரசு அதிகாரி
இதையடுத்து, அவரது வீடு உள்பட 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்து வைத்திருந்தது தெரிய வந்தது.அரசு அதிகாரியாக மாத சம்பளம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வரையிலானவரின் சொத்துக்கள், ரூ.100 கோடி மதிப்புக்கு மேல் இருக்கிறது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது கிஷான் நாயக்குக்கு சட்டவிரோதமாக பல இடங்களில் சொத்துக்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது வீட்டும், நிஷாம்பாத் மற்றும் நாராயன்கெத் பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகளும் உட்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்..
ரூ.100 கோடி சொத்து
சோதனையின் போது அவரது சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதில், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள 31 ஏக்கர் விவசாய நிலம் மட்டும் ரூ.62 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் நிஷாம்பாத் நகராட்சியில் உள்ள 10 ஏக்கர் நிலம், லஹாரி இன்டர்நேஷனல் ஹோட்டலில் 50 சதவீத பங்குகள் போன்றவையும் அவருடைய சொத்துகளாக இருக்கின்றன. நிஷாம்பாத் பகுதியில் 3000 சதுர அடியளவுள்ள இடத்தையும் அவர் வாடகைக்கு விட்டு, அதன்மூலமும் வருமானம் பெற்றுள்ளார்.சாதாரணமாக மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வருமானம் பெறும் அரசு அதிகாரி ஒருவரின் பெயரில் இந்த அளவுக்கு சொத்துகள் இருப்பது சக ஊழியர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம், சோதனையில் ஒரு கிலோ தங்க நகைகள், வங்கிக் கணக்கில் ரூ.1.37 கோடி பணம் மற்றும் பல்வேறு ஆடம்பர கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டன.
கிலோ கணக்கில் தங்கம்
கிஷான், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளாராம்.. இவர் சொத்துகளை வாங்கும்போது, நிஷாம்பாத் மற்றும் சங்காரெட்டி பகுதிகளில் உள்ள ஏஜெண்டுகள் மூலம் இணைந்து செயல்பட்டு, பெரும் நிலங்களையும் விவசாய பண்ணைகளையும் சொந்தமாக குவித்ததாக கூறப்படுகிறது.
ஆடிப்போன ஹைதராபாத்
இதனால் கிஷான் நாயக்கை ஹைதராபாத் பகுதியில் அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரது சொத்து குவிப்பு வழக்கு மீது தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்,.. மேலும் அவருக்கு சொத்துக்கள், நிலங்கள், ஹோட்டல் பங்குகள், நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..கிஷானின் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்ததற்கான காரணங்கள் மற்றும் தொடர்புள்ள நபர்கள் யார் என்பதையும் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.கிஷானின் பறிமுதலான சொத்துக்கள் என்னென்ன தெரியுமா? சங்காரெட்டி மாவட்டம் 31 ஏக்கர் நிலம் ரூ.62 கோடி, நிஷாம்பாத் 10 ஏக்கர் நிலம், லஹாரி இன்டர்நேஷனல் ஹோட்டலில் 50 சதவீத பங்குகள், 1 கிலோ தங்க நகைகள், வங்கிக் கணக்கில் ரூ.1.37 கோடி, ஆடம்பர கார்கள் ஆகும்.. மொத்தத்தில் ஒரு போக்குவரத்து அதிகாரி சட்டவிரோதமாக சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்து வைத்திருப்பது, ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்து வருகிறது..!!















