Site icon News now Tamilnadu

முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டுக்கு வந்த முன்னாள் உரிமையாளர்கள்!

சென்னை,
கோபாலபுரம் இல்லம், தமிழக அரசியலில் தனித்துவமான அடையாளமாக, இந்திய அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கிய இடம். கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, சரபேஸ்வரர் என்பவரிடம் இருந்து வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் கருணாநிதிக்கு கோபாலபுரம் வீட்டை விற்பனை செய்த குடும்பத்தினர், மீண்டும் கோபாலபுரம் வீட்டை பார்க்க ஆவல் கொண்டனர். அவர்களின் ஆசையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வைத்தார். பின்னர் அவருடன் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதனை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

வீடு என்பது பலரது கனவு. கனவு இல்லத்தை சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறி விடுகின்றன.
எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு. கருணாநிதி திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு.

இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. கருணாநிதி கோபாலபுரம் வீட்டை சரபேஸ்வரர் என்பவரிடம் 1955-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார்.

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தை கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் கருணாநிதி.

அன்று தனக்கு திருமணமான கோபாலபுரம் வீட்டை காண, அமெரிக்காவில் இருந்து திரும்பிய சரோஜா சீதாராமன் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரை கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்பு பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது.

இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version