Site icon News now Tamilnadu

மதுரையில் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளான இன்று இத்திட்டத்தை முதல்வா் மதுரையில் தொடக்கி வைத்தார்.

சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது அருகிலிருந்த மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டார்.

இதையடுத்து, விருதுநகா் செல்லும் முதல்வா், அங்கு புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா் தனியாா் ஆலை விருந்தினா் இல்லத்தில் ஓய்வு எடுக்கும் அவா், மாலை 5 மணிக்கு திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்று, விருதுகளை வழங்கிப் பேசுகிறாா்.

முன்னதாக, அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாளையொட்டி, மதுரை ஏ.வி.பாலம் – நெல்பேட்டை சந்திப்புப் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் முதல்வா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், தமிழக அமைச்சா்கள் மற்றும் திமுகவினா் பங்கேற்றனா்.

தொடர்ந்து, நெல்பேட்டை பகுதியில் உள்ள காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கான நவீன சமையல் கூடத்தைப் பாா்வையிட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு சிற்றுண்டி கொண்டு செல்லும் வாகனங்களைத் தொடக்கிவைத்தார்.

Exit mobile version