புதுக்கோட்டை அஇஅதிமுகவில் பரபரப்பு: அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ‘SAS சேட்’ அதிரடி அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்ட அஇஅதிமுக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அக்கட்சியின் மாநகர கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளருமான Rtn. ஹாஜி S.அப்துல் ரஹ்மான் (என்ற SAS சேட்), தனது அனைத்து அரசியல் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த திடீர் முடிவு புதுக்கோட்டை மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அஇஅதிமுகவில் விசுவாசமிக்க தொண்டராகவும், நிர்வாகியாகவும் செயலாற்றி வந்தவர் SAS சேட். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான கடிதத்தில்,
“சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, எல்லா எதிர்காலக் கட்டத்திலும் உண்மையான முறையில் மக்கள் பணியாற்றினேன். எனக்கு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கி, அரசியலில் என்னை ஆளாக்கி அழகு பார்த்த பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை நினைவு கூர்ந்து, கனத்த இதயத்துடன் கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சேவை தொடரும்!
அரசியல் பொறுப்புகளில் இருந்து விலகினாலும், தொடர்ந்து பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யப்போவதாக அவர் உறுதியளித்துள்ளார். “இதுவரை எனக்கு உறுதுணையாக நின்ற கழகத்திற்கும், என் மீது அன்பு கொண்ட பொதுமக்களுக்கும், தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். எப்போதும் போல் என் பொதுவாழ்வில் அனைவருக்கும் உதவும் வகையில் உறுதுணையாக இருப்பேன்” என்றும் அவர் தனது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்
மாவட்ட அரசியலில் பின்னடைவா?
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மிக முக்கியத் தளபதியாகவும், புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் கட்சியின் முகமாகவும் விளங்கிய SAS சேட்-ன் இந்த விலகல், மாவட்ட அஇஅதிமுகவிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் உறுப்பினர், மாவட்டச் சாலை பாதுகாப்புச் சங்கத் துணைத் தலைவர் எனப் பல்வேறு மக்கள் நல அமைப்புகளில் முத்திரை பதித்த ஒரு மூத்த நிர்வாகி, “தனிப்பட்ட காரணங்களுக்காக” விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தாலும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள் குறித்து உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
முன்னாள் அமைச்சரின் தீவிர ஆதரவாளர் ஒருவரின் இந்த அதிரடி விலகல் முடிவு, புதுக்கோட்டை அதிமுகவில் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற பரபரப்பை எகிற வைத்துள்ளது

