Site icon News now Tamilnadu

தீபாவளி நேரத்தில் உயிருக்கு போராடியவரைத் தனது சொந்த வாகனத்தில் மீட்ட டாக்டர்.சி.விஜயபாஸ்கர்! மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அரை மணி நேரத்திற்கும் மேலாக நடுரோட்டில் காத்திருந்து மனிதநேயம்

தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டையில் பல்வேறு அலுவல் பணிகளை முடித்துவிட்டு, தனது சொந்தத் தொகுதியான விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், அடப்பக்காரச் சத்திரம் அருகே சென்றபோது இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தைக் கண்டார்.

இந்த விபத்தில் மூன்று பேர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தனர். ஆரியூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்திருந்தனர். அதே விபத்தில் எல்லையப்பட்டியைச் சேர்ந்த முத்து என்ற இளைஞர் மிகக் கடுமையாகக் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.

இந்தக் கோரக் காட்சியைக் கண்ட டாக்டர்.சி.விஜயபாஸ்கர், ஒரு நொடியும் தாமதிக்காமல் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு காயமடைந்தவர்களிடம் ஓடோடிச் சென்றார். மருத்துவர் என்ற தனது கடமையை உணர்ந்து, காயமடைந்தவர்களுக்குத் தானே முதலுதவி அளித்தார். அவர்களின் முகம் மற்றும் உடலில் படிந்திருந்த ரத்தத்தைத் தனது துண்டால் துடைத்து, உயிரைக் காப்பாற்றத் தேவையான உடனடி உதவிகளைச் செய்தார்.

குறிப்பாக, எல்லையப்பட்டியைச் சேர்ந்த முத்து மிகவும் மோசமான நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்ததால், ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல் தனது சொந்த வாகனத்திலேயே அவரை ஏற்றி உடனடியாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து, ஆரியூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவருக்கும் முதலுதவி அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இதுமட்டுமின்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, விபத்தில் காயமடைந்த மூவருக்கும் எவ்விதத் தாமதமுமின்றி உரிய அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விபத்து நடைபெற்ற இடத்தில் போக்குவரத்தையும் சீர்செய்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அடப்பங்காரச் சத்திரம் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாகச் சாலையிலேயே காத்திருந்தார். மருத்துவமனைக்குச் சென்ற தனது சொந்த வாகனம் திரும்பி வந்த பிறகே அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினார்.

தீபாவளித் திருநாளில் தனது சொந்தப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வேளையிலும், சாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடியவர்களைக் கண்டதும் தன்னலம் கருதாமல் ஓடோடிச் சென்று உதவிய டாக்டர் சி.விஜயபாஸ்கரின் இந்த மனிதநேயச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

பதவியைக் கடந்து மனிதநேயம்… அரசியலைக் கடந்து மருத்துவர் கடமை… உயிரைக் காக்க ஓடோடி வந்த மனிதநேய மருத்துவர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்!

Exit mobile version