தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!
அதிமுக-வுடன் பியூஷ் கோயல் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கசியவிடப்பட்ட தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் பெரும் புயலை கிளப்பி, சில கட்சிகளை தவெக பக்கம் தடம் மாற வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதிமுக உடனான பியூஷ் கோயல் டீம் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தினகரன், ஓபிஎஸ்ஸை கூட்டணிக்குள் சேர்ப்பது குறித்தான பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்று நடக்கவில்லை” என்று தெரிவித்தார். அதேசமயம் தினகரன், பிரேமலதா, ஓபிஎஸ் ஆகியோருக்கு முறையே ஆறு, ஆறு, மூன்று என தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனப் பேசப்பட்டதாக வெளியான செய்திகள் அந்த மூவரையுமே கடும் கோபத்திற்கு உள்ளாக்கிவிட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “அமமுக-வுக்கு ஆறு இடங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒதுக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகள் வதந்தி. யாரை தோற்கடிக்கும் நோக்கில் அமமுக உருவாக்கப்பட்டதோ, அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்” என்று சொன்னார். அதேபோல், ஓபிஎஸ்ஸின் ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக’ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும், “பழனிசாமி தலைமையை ஏற்கவே முடியாது. 3 தொகுதிகளுக்காக அந்த அணிக்குச் செல்லக்கூடாது” என்று வற்புறுத்திய நிலையில், ஓபிஎஸ்ஸும் அதை வழிமொழிந்தார். அதிமுக அணி இல்லாத நிலையில் இவர்கள் இருவருக்கும் இருக்கும் அடுத்த சாய்ஸ், திமுக அணி அல்லது தவெக அணி தான்.
ஆரம்பம் முதலே தவெக-வுக்கு ஆதரவாகப் பேசி வரும் தினகரன், “தவெக தலைமையில் தாங்கள் கூட்டணி அமைத்தால், அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்” என்றும் சொன்னார். ஆனாலும் அமமுக விஷயத்தில் எந்தப் பிடிமானமும் கொடுக்கவில்லை தவெக. அதனால் மையமாகவே பேசிவந்த தினகரனுடன் தற்போது தவெக தரப்பிலிருந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இவரோடு சேர்ந்து ஓபிஎஸ்ஸும் பனையூர் பக்கம் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பது உண்மை என செங்கோட்டையனும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தினகரன், ஓபிஎஸ்ஸைத் தொடர்ந்து பிரேமலதாவும் ஆறு சீட் விஷயத்தில் தகிப்புடன் இருக்கிறார். “எந்தக் கட்சி இப்படியான செய்தியை பரப்பியதோ அந்தக் கட்சிக்கே இது அழிவு காலத்தை உண்டாக்கும்” என்று சாபம் விட்டிருக்கிறார். இப்போதைக்கு அந்தக் கட்சி திமுக, அதிமுக, தவெக என மூன்று கட்சிக்கும் வாசலைத் திறந்து வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில், கவுரமான இடங்களைப் பெறுவதற்காக தவெக பக்கம் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனாலும் திமுக-வை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டே வரும் பாஜக, இவர்களை எல்லாம் அவர்கள் போக்கிலேயே போக விட்டுவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

