Site icon News now Tamilnadu

தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.. செங்கோட்டையன் அளித்த விளக்கம்!!

தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.. செங்கோட்டையன் அளித்த விளக்கம்!!

தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை மேலும், 6 மாதங்களுக்கு நீடித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு புதிய தனி அலுவலர்களையும் நியமித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல், 27 மாவட்டங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. எனினும், வார்டு மறுவரையறைப் பணிகள் (Delimitation) மற்றும் பல்வேறு நிர்வாகக் காரணங்களால் தமிழ்நாட்டில் அடுத்த உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இதனால், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் அன்றாட நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தனி அலுவலர்கள் (Special Officers) நியமிக்கப்பட்டு வந்தனர்.

இதற்கிடையில், புதிதாக உருவான மாவட்டங்கள் மற்றும் மாவட்ட பிரிப்புக்குள்ளான மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த நிலையில், அதற்கான பதவிக்காலமும் இந்த மாதம் 19-ம் தேதியுடன் நிறைவடைந்திருக்கிறது. இந்தச்சூழலில் தான், சென்னை தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தச்சூழலில் தான், 28 தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும், 6 மாதங்களுக்கு அதாவது 2027 ஏப்ரல் 19 வரை நீட்டித்தும், மற்ற 9 மாவட்டங்களுக்கான தனி அலுவலர்களை நியமித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், மீண்டும் 6 மாதங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் அரசு அதிகாரிகளின் கைகளுக்குச் செல்கிறது.

அதேசமயம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரியுடன் நிறைவடையவிருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஒரே கட்டமாக நடைபெற்றிருந்தது. அதன்பிறகு, ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி என தனித்தனியாகவே நடத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்தாண்டு மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.

இதற்கிடையில், தனி ஆலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் அமைச்சரும் தவெகவின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், தொகுதியை சீரமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போடப்பட்டுள்ளதே தவிர, அச்சத்தின் காரணமாக இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version