தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர். ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார் ஐஏஎஸ்.?
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் நிர்வாகத் தலைமையில் முக்கிய மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
தற்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மிக முக்கியமான துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய்குமார், பல்வேறு காலகட்டங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக இருந்தபோது, அவரது முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராகச் செயல்பட்டு மின் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களையும், திறமையான நிர்வாகத்தையும் வழங்கியவர் எனப் பாராட்டப்பட்டவர்.
தி.மு.க. ஆட்சியில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பொறுப்பு சாய்குமாருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் (TNPL) ஆகியவற்றின் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றி தனது நிர்வாகத் திறமையை நிரூபித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுக்கவும், அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியின் வழிகாட்டுதல் தேவை என்பதாலும் இந்த அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள சாய்குமார், தேர்தல் கால நிர்வாக நடைமுறைகள் மற்றும் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

