Site icon News now Tamilnadu

செந்தில்பாலாஜிதான் உங்களுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்…’’ கரூர் ஸ்டாலின் பேச்சுக்கு புதுக்கோட்டையில் இபிஎஸ் பதிலடி!

கரூர் ஸ்டாலின் பேச்சுக்கு புதுக்கோட்டையில் இபிஎஸ் பதிலடி!

’’செந்தில்பாலாஜிதான் உங்களுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்…’’

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான சூறாவளி சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை முடித்துவிட்டு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திலகர் திடலில் திரண்டிருந்த மக்களிடம் சிறப்புரையாற்றினார்.
மக்களிடம் இபிஎஸ், ‘’புதுக்கோட்டை நகரமே அதிர்கின்ற அளவுக்கு மக்கள் வெள்ளம். எழுச்சியால் நிரம்பிவழிகிறது. இதை பார்க்கும்போதே அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிறது. அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் நிறுத்தப்பட்டிருக்கிறார். திருமயம் தொகுதியில் வைரமுத்துவும், ஆலங்குடி தொகுதியில் விமலும் நிற்கிறார்கள்.
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்து, பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து மக்களிடம் நன்மதிப்பை கொண்டுவந்தவர். நான்குமுறை எம்.எல்.ஏவாக இருந்தவர். பி.கே.வைரமுத்து மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் வாரியத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர், அவர் திருமயம் தொகுதியில் நிற்கிறார். விமல் அவர்கள் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடுகிறார், அவர் வழக்கறிஞர், இளைஞர். இவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.
புதுக்கோட்டை என்றால் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்றது. இளைஞர்கள் ஆரவம் கொண்டவர்கள், பாரம்பரிய விளையாட்டு. ஜல்லிக்கட்டு போட்டியை நானே நேரடியாக வந்து துவக்கிவைத்தேன். ஜல்லிக்கட்டு காளையை குழந்தையை வளர்ப்பது போல வளர்த்து வருகிறார்கள். காளைகளை வளர்த்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் பெயர் பெற்ற மாவட்டம். ஜல்லிக்கட்டு போட்டிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். ஆன்லைன் முறை இப்போது உள்ளது, அதிமுக ஆட்சியில் ஏற்கனவே உள்ள பழைய முறையை அமல்படுத்துவோம். ஜல்லிக்கட்டில் உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், வீரர்களுக்கு காப்பீடு கொண்டுவந்து பிரீமியம் தொகையை அரசே செலுத்தும். ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பொலிவோடு நடக்க வழிவகை செய்யப்படும்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று ஸ்டாலின் பேசுகிறார். பாவம், பொம்மை முதல்வருக்கு எதுவும் தெரியாது. அந்தக்காலத்தில் அரசர் வெளியே வரமாட்டார், அமைச்சர்களிடம் கேட்டால் மாதம் மும்மாரி மழை பெய்கிறது என்பார்கள். அதுபோல அரசு அதிகாரிகளைக் கேட்டு, அரசு நடத்தும் முதல்வர் ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்காம், நாடே சந்தி சிரிக்குது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை.
இதெல்லாம் எதனால் நடக்கிறது..? போதையால்தான். போதை ஆசாமிகளால் குற்ற நிகழ்வுகள் அதிகரித்துவிட்டது. பலமுறை சொல்லியும் அரசு செவிசாய்க்கவில்லை. ஏனெனில் கஞ்சாவுக்கு துணை நிற்பதே ஆளுங்கட்சியினர் தான். இதெல்லாம் தெரியாதது போல நடிக்கிறார் ஸ்டாலின். 2 வயது சிறுமி, பள்ளி சிறுமி என சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். போலீஸார் புகார் வாங்க மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? சிவகங்கை அஜித்குமார், அவர் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்து படுகொலை செய்தார்கள். இதெல்லாம் இந்த ஆட்சியில் நடந்த கொடுமைகள்.
நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறதாம், 5 லட்சம் கோடி கடன் வாங்கி, மக்களை கடனாளியாக்கிவிட்டு பேசுகிறார். கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள். கடன் வாங்கி ஆட்சி யார் வேண்டுமானாலும் செய்யலாம். அந்த கடனை யார் திருப்பிச் செலுத்துவது? நாம் தான் செலுத்த வேண்டும். கடன் கொடுத்தவன் சும்மா விடுவானா? கடன் வாங்கலாம், ஆனால் லட்சக்கணக்கான கோடி வாங்க வேண்டுமா?
வரி வருவாய் கூடுதலாக வருகிறது, கடன் வாங்குகிறீர்கள். ஆனால், புதிய திட்டமில்லை. காவிரி குண்டாறு திட்டம் எப்பேர்ப்பபட்ட திட்டம். மாநிலத்தின் சொந்த நிதி 14 ஆயிரம் கோடி ஒதுக்கினோம். புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயன்பெறுகிறது. மேட்டூர் உபரி நீர் கால்வாய் வெட்டி, வேளாண்மைக்கும், குடிக்கவும் நீர் கிடைக்கும். விவசாயத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும். வறட்சி என்ற பெயர் மறைந்து பசுமையான மாவட்டம் என்று பெயர் பெறும் திட்டம். 100 ஆண்டு திட்டமிது.
நிதி ஒதுக்கி புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டினோம், திட்டத்தை நிறுத்திவிட்டனர். இப்படியொரு விவசாயிகள் விரோத ஆட்சி தேவையா? நானும் விவசாயி என்பதால் அனுபவ ரீதியாக எனக்குத் தெரியும். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. தூர்வாரப்பட்டதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. மீண்டும் அதிமுக ஆட்சியில் காவிரி வைகை குண்டாறு திட்டம், குடிமராமத்து திட்டம் தொடரும்.
கரூர் மாவட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார், செந்தில்பாலாஜி இருப்பதால் வெற்றி பற்றி கவலைப்படப் போவதில்லையாம். அவர்தான் ஆப்பு வைக்கப் போகிறார். மக்கள் சரியான ஆப்பு வைப்பார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதே செந்தில் பாலாஜியை ஸ்டாலின் எப்படி கேவலமாகப் பேசினார் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். செந்தில்பாலாஜி அடிக்கடி கலர் மாறுவார்.
சட்டசபையில் அம்மா இருக்கும்போது செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தார், அப்போது ஸ்டாலின், கருணாநிதி பற்றி செந்தில் பாலாஜி பேசியது அவைக்குறிப்பில் உள்ளது. எல்லாம் எங்கள் கைவசம் உள்ளது, அடுத்த கூட்டத்தில் மக்கள் கவனத்துக்கு கொண்டுபோகப்படும்.
செந்தில்பாலாஜி என்றாலே 10 ரூபாய் ஞாபகம் வரும். அப்படியொரு ஐஎஸ்.ஐ முத்திரை பதித்தவர், அவரை புகழோ புகழ் என்று புகழ்கிறார் ஸ்டாலின். அண்ணா உருவாக்கிய திமுக இன்று கருணாநிதி குடும்பத்தின் கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது. ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஆகியோர் அதிகார மையம்.
(மக்கள் ஓபிஎஸ் பற்றி பேசச் சொல்கிறார்கள்). வேண்டாங்க. நல்ல நேரத்தில் அவர் பற்றி பேச வேண்டாம். இன்று பங்குனி உத்திரம், அருமையான நாள், யாரெல்லாம் பி டீம் என்பது தெரிந்துவிட்டது, அவரையெல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார். அதிமுகவை அழிக்க நினைத்தவர் தான் அழிந்துபோவார். எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சி இது. அம்மா இறுதி மூச்சு வரை கண்ணை இமை காப்பது போல காத்து நின்றார். இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது.
தேர்தல் நேரத்தில் 525 வாக்குறுதி வெளியிட்டு நான்கில் ஒருபங்கு கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாம். கல்விக் கடன் ரத்து செய்தார்களா? 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்தினார்களா? பெட்ரோல் டீசல் விலை குறைத்தார்களா? கேஸ் மானியம் கொடுத்தார்களா? கூடுதலாக சர்க்கரை போடுவதாக சொன்னார்கள் போட்டார்களா? சர்க்கரையை கொள்ளையடிக்கிறார்கள். கருணாநிதி இருக்கும்போது ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட கட்சிக்கு நம்மைப் பற்றி பேச அருகதை இருக்கிறதா?
அதிமுக ஆபீஸ் டெல்லியில் இருக்கிறதாம், கண்ணு தெரியலைன்னா வாங்க, நான் காட்டுகிறேன் சென்னையில்தான் இருக்கிறது. தேர்தல் எங்கு நடக்கிறது? தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ.வுக்கும் தேர்தலாம். இது சட்டமன்றத் தேர்தல். அதிமுக தலைமை தாங்குகிறது. அதிமுகதான் ஆட்சி அமைக்கும். இதை அமித்ஷாவே நேரடியாக வந்து அறிவித்தார். அப்புறம் என்ன உங்களுக்கு சந்தேகம்?
நம்மை பற்றி பேச சரக்கு இல்லை. கூட்டணி பிரச்னை யாருக்கு இடையே நடந்தது? காங்கிரஸ் தலைமை அலுவலகம் டெல்லியில் தான் இருக்கிறது. இண்டியா கூட்டணி காணாமல் போய்விட்டது. ஸ்டாலின் தலைமையில் நிறைய கட்சிகள் இருக்கிறதாம். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விளம்பரத்திலேயே ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின்.
ஏற்கெனவே இருந்த கூட்டணிதான் திமுகவுடன் இருக்கிறது. புதிதாக அரை பெர்சன்ட் ஓட்டு போய் சேர்ந்திருக்கிறது. அது ஐசியூவில் இருந்தது, வெண்டிலேட்டர் வைத்து போராடியபோது உயிர் கொடுத்தது அதிமுக. அது அங்கு போய்விட்டது. வேறு எந்தக் கட்சியுமில்லை. ஆனால் அதிமுகவிடம் அமமுக வந்து சேர்ந்திருக்கிறது. சிறிய கட்சி, பெரிய கட்சி என பிரித்துப் பார்க்கவில்லை, எல்லாம் சேர்ந்து மக்கள் விரோத திமுக கூட்டணியை வீழ்த்துவோம்.
போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் சீரழிகிறார்கள். அதிமுக ஆட்சியில் மூன்றே மாதத்தில் கஞ்சா இல்லாத மாநிலமாக உருவாக்குவோம். அது எங்கள் லட்சியம். திமுக அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் பேசினார். உதயநிதியும் சபரீசனும் 30 ஆயிரம் கோடி வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பதாகச் சொன்னார், ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டில் 30 ஆயிரம் கோடி என்றால், இந்த ஐந்தாண்டில் எத்தனை லட்சம் கோடி கொள்ளை அடித்திருப்பார்கள்..?
நகராட்சித் துறை ஊழலைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய கடிதம் கொடுத்தது. எஃப்.ஐ.ஆர். போடவில்லை, அதிமுக வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிட்டும் போடவில்லை, அதிமுக ஆட்சியில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
(அப்போது மக்கள் ரகுபதி… ரகுபதி என்று குரல் கொடுக்கிறார்கள்) அவரும் இதில் நிச்சயம் சிக்குவார். வேட்டியை மாற்றிக்கட்டி சென்றவர்தானே. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர். எத்தனை பேர் இவரை எம்.எல்.ஏவாக்க பாடுபட்டனர், அம்மா அமைச்சராக அடையாளம் காட்டினார். அந்த அடையாளத்தை வைத்துத்தான் இன்று திமுகவுக்கு சென்றார். இந்த இயக்கத்துக்கு துரோகம் செய்தவர் எவரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்று 8 பேர் அமைச்சராக இருக்கிறார்கள். அந்த கட்சியில் ஆள் இல்லை. இங்கிருந்துபோன 19 பேர் எம்.எல்.ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த கூடாரம் காலியாகிவிட்டது, மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 40 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய். பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 45 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய். இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய், திமுக ஆட்சியில் 48 ரூபாய். கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய், திமுக ஆட்சியில் 190 ரூபாய், நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய், திமுக ஆட்சியில் 500 ரூபாய், துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய், திமுக ஆட்சியில் 130 ரூபாய், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய், திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் பாதிப்பு. ஏழைகள் பாதிக்கப்படுவது குறித்து அரசுக்கு கவலையில்லை.
காலையில் ஸ்டாலினும் அமைச்சர் மாசுவும் நடைபயணம் போனார்கள். அப்போது உதயநிதி நடித்த படம் எப்படி ஓடுகிறது, எத்தனை வசூல் என்று கேட்கிறார். இதுதான் நாட்டுக்கு முக்கியமா? நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டால் நல்ல முதல்வர். இவர் எவ்வளவு மோசம் பாருங்கள். திமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் சரியில்லை. கருணாநிதிக்கு எழுதாத பேனாவை நடுக்கடலில் வைப்பாராம். பேனாவை நினைவு மண்டபம் அருகில் வையுங்கள், எழுதும் பேனாவை அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுங்கள். இவர் தான் இப்படி என்றால்,அவர் மகன் உதயநிதி கார் பந்தயம் நடத்துகிறார். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆளவேண்டுமா?
எல்லா துறையில் ஊழல். எல்லாம் தோண்டியெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்கிறார், அதனால் புதுக்கோட்டையில் என்னென்ன திட்டம் என்று சொல்கிறேன். காவிரி வைகை குண்டாறு திட்டம் ஆரம்பித்தோம், நிறுத்திவிட்டீர்கள். மீண்டும் நிறைவேற்றப்படும்.
புதுக்கோட்டையில் அம்மா இருக்கும்போது மருத்துவக் கல்லூரி கொடுத்தார். 400 கோடியில் அமைத்தோம். நானே நேரடியாக வந்து திறந்துவைத்தேன். அற்புதமான சிகிச்சை கிடைக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் பல் மருத்துவக் கல்லூரி கேட்டார், அதையும் கொடுத்தோம். நானே அடிக்கல் நாட்டினேன். இப்படி ஒரு திட்டமாவது நிறைவேற்றினார்களா? எல்லாம் கொள்ளை அடிப்பதில் குறி. அதிமுக பல திட்டங்கள் கொடுத்தோம். அதனால் நெஞ்சை நிமிர்த்தி உங்களை சந்திக்கிறோம், அந்த தில்லு திராணி இந்த மாவட்ட அமைச்சருக்கு இருக்கிறதா?
பள்ளிகள் தரம் உயர்த்தியதும், அதிக மேல்நிலைப் பள்ளிகளை திறந்ததும் அதிமுக ஆட்சி. திமுக ஆட்சியில் 200 பள்ளிகளை மூடிவிட்டனர். நடத்த முடியலையாம். இவர்கள் நாட்டை ஆண்டால் எப்படியிருக்கும் எனபதற்கு இதுவே உதாரணம்.
புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலுக்கு தங்கத்தேர், ஸ்மார்ட் சிட்டி துவக்கம், விராலிமலை தாலுகா, நீதிமன்றம், சுற்றுலா தளம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி, கரம்பக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கும் ஐடிசி, உணவுப் பண்டங்கள் தொழிற்சாலையை நானே வந்து திறந்துவைத்தேன்.
விராலிமலை கால்நடை மருத்துவமனை, குடிசை மாற்று வாரிய வீடு, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் 574 கோடியில் இரண்டு திட்டம் நிறைவேற்றினோம், 769 கிராமத்திற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுத்தோம். அம்மா கொடுத்தார், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நான் திறந்துவைத்தேன்.
திருமயம் போக்குவரத்து பணிமனை, ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தல், சாலைகள், மாணவர் தங்கும் விடுதி, துணை மின் நிலையம் என இவ்வளவும் செய்திருக்கிறோம். அரசு வேளாண்மைக் கல்லூரி உடுமையான்மலையில் கொண்டுவந்தோம். இப்படி அதிகமான கல்லூரிகளைத் திறந்து குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழல் உருவாக்கினோம். இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான்.
திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்ற இரண்டு கை இல்லாதவர் என்னைச் சந்தித்து கை பொருத்தும்படி கோரிக்கை வைத்தார். விஜயபாஸ்கரிடம் அனுப்பினேன். அவர் மெடிக்கல் டீம் போட்டு செய்து பார்க்கலாம் என்றார. இறந்தவரிடம் இருந்து இரண்டு கைகளை எடுத்து அவருக்குப் பொருத்தினோம். இப்போது நலமோடு இருக்கிறார். திருமணமாகி குழந்தையோடு இருக்கார்.
திமுக ஆட்சியில் கால்பந்து வீராங்கனை கால் இல்லாமலும், உயிரோடு சென்றால் உயிர் இல்லாமலும் வருகிறார்கள். கடலூரில் சளிக்கு மருந்து கேட்டால் நாய்க்கடி மருந்து கொடுக்குறார்கள்.
இந்த ஆட்சியில் கிட்னியை திருடுகிறார்கள், திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் முறைகேடு நடந்திருக்கிறது. இதுவரை நடவடிக்கை இல்லை. அதிமுக ஆட்சியில் கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தரப்படும். திமுகவினர் மருத்துவமனைக்குச் சென்றவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள், குமாரபாளையத்தில் கிட்னிக்கு பதிலாக கல்லீலரை எடுத்துவிட்டனர்.
திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையான உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய அரசு தேவையா?
ஆலங்குடியில் வேளாண்மைக் கல்லூரி கொடுக்கப்பட்டது. அம்மா பூங்காவை கலைஞர் பூங்காவாக மாற்றிவிட்டனர். நாம் பெற்ற பிள்ளை அவர் பெயர் வைக்கிறார். திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தை களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் வழங்கப்படும். பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
வீடில்லாத அனைவருக்கும் அரசு சார்பில் நிலம் வாங்கி, அற்புதமான கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். சரியான நேரத்திற்கு பணிக்கும், படிக்கவும் செல்ல ஏதுவாக, 5 லட்சம் மகளிர்க்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எந்தவித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
கட்டிட தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் 25 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தால் சிகிச்சை செலவை அரசே செலுத்தும். மாணவர் கல்வி கடன், விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளூபடி செய்யப்படும்.
அம்மா மினி கிளினிக் 2 ஆயிரம் திறந்தோம். அதையும் மூடிவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும். அம்மா மருந்தகம் பெயரைத்தான் மாற்ற முடியும். எந்தெந்த பெயரையெல்லாம் மாற்றினீர்களோ மீண்டும் அதிமுக ஆட்சியில் இருந்த பெயர் சூட்டப்படும். அம்மா உணவகம் தரமான முறையில் செயல்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.

Exit mobile version