Site icon News now Tamilnadu

சட்டவிரோத பணி நீக்கம்: ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்க தி இந்து குழுமத்துக்கு கோவை தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பணி நீக்கம்: ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்க தி இந்து குழுமத்துக்கு கோவை தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு!

தி இந்து குழுமத்தின் – இந்து தமிழ் திசை நாளிதழில் சீனியர் சப்-எடிட்டராக கடந்த 2013-ம் ஆண்டு முதல் திரு ச.மணிகண்டன் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2025ம் ஆண்டு, மார்ச் 10ம் தேதி அவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிக்கு இனி வர வேண்டாம் என்பதை வெறும் 5 நாள்களுக்கு முன்பாக (மார்ச் 5) அவரிடம் நிர்வாகம் தெரிவித்து, 13 ஆண்டுகள் பணியாற்றிய தனது ஊழியரை கைவிட்டு, நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியது தி இந்து குழுமம்.

இந்த பணிநீக்கத்தை எதிர்த்து தொழில் தகராறு சட்டம், 2 (A) படி கோவை மண்டல தொழிலாளர் நல அலுவலகத்தில் திரு மணிகண்டன் முறையீடு செய்தார். இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்த தொழிலாளர் அலுவலகம், மணிகண்டனின் பணி நீக்கம் சட்ட விதிகளின்படி இல்லை என கருத்து தெரிவித்தது.

ஆனால், அதற்கு அந்த நிறுவனம் உடன்படவில்லை என்பதால், இழப்பீடு கோரி கோவை தொழிலாளர் நீதிமன்றத்தை மணிகண்டன் நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிமன்றம், அவரின் பணி நீக்கம் சட்ட விரோதமானது என தெரிவித்து, சுமார் 10 மாதங்கள் பணி இல்லாமல் அவர் பட்ட கஷ்டங்களுக்கு இழப்பீடாக ரூ. 6 லட்சத்தை மூன்று மாதங்களுக்குள் வழங்க உத்தரவிட்டுள்ளது. தவறும்பட்சத்தில் 7% வட்டியுடன் சேர்த்து அவருக்கு வழங்க வேண்டும் என நேற்று (அக். 28) உத்தரவிட்டுள்ளது.

மாண்பமை நீதிமன்றத்தின் இந்த சிறப்புமிக்க தீர்ப்பு மணிகண்டன் என்ற சாதாரண பத்திரிகை ஊழியருக்கு கிடைத்த வெற்றி மட்டும் இல்லாமல், இனி வரும் காலங்களில் இதுபோல பாதிக்கப்படும் தொழிலாளருக்கு ஒரு நம்பிக்கையை அளித்திருப்பதுடன், இதுபோன்ற சட்ட விரோத பணி நீக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது

Exit mobile version