Site icon News now Tamilnadu

காவல் துறையினருக்கு ‘8 மணி நேர வேலை’ கோரி வழக்கு – தமிழக டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ‘காவலர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும்’ என்ற விதியை முறைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சத்யபிரியா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழக காவல் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து காவலர்களுக்கும் குடும்பமும் குழந்தைகளும் உள்ளனர். இருந்தபோதிலும், அவர்களால் தங்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட முடிவதில்லை.

காவலர்களின் வேலை நேரம் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு நாளும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் இருப்பதால், காவலர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள்.

கடந்த 2022-ல் காவலர்களுக்கு வார விடுப்பு அறிவிக்கப்பட்டது. அது முறையாக அமல்படுத்தவில்லை. அந்த விதிப்படி காவலர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும். ஆனால் தற்போது 16 மணி நேரம் பணிபுரிகின்றனர். இந்தப் பணிப்பளு காரணமாக 2016-க்கு பின் காவலர்களின் தற்கொலை என்பது அதிகரித்து உள்ளது.

எனவே, தமிழக காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலைத் திட்டம் மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், ‘காவலர்கள் ஒருநாள் பணியில் இல்லை என்றால் என்ன ஆகும்? போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எப்படி நீதிமன்றம் வர முடியும்? எவ்வாறு இப்படியெல்லாம் மனுத் தாக்கல் செய்கிறீர்கள்? மனு தொடர்பாக தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்

Exit mobile version