Site icon News now Tamilnadu

அம்மாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் எங்கே இருந்தாலும் ஒரு பெண்ணை இது போல பேசுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது” முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா..

சசிகலா விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வர இருக்கும் நிலையில்… அதிமுகவில் இருந்து சசிகலாவுக்கான ஆதரவுக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

இந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா இன்று (ஜனவரி 13) சசிகலாவை போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.

பெண்களை இழிவாகப் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சென்னையில் ஆர்பாட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோகுல இந்திரா,

சசிகலா ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர். அவர் எங்கிருந்தாலும் எங்களின் மரியாதைக்குரிய வகையில் போற்றக் கூடிய வகையில் இருப்பவர். அவரையும் அம்மாவையும் இதுபோல பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் அம்மாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் எங்கே இருந்தாலும் ஒரு பெண்ணை இது போல பேசுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார் கோகுல இந்திரா.

இது அதிமுக வட்டாரத்திலும் அமமுக வட்டாரத்திலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘சசிகலாவுக்கு ஆதரவாக யாராவது இருப்பார்களேயானால் அவர்களை மாசெக்கள் கண்காணிக்க வேண்டும்’ என்று பேசியிருந்தார். இந்நிலையில் பெண்களை இழிவுபடுத்துவதைக் கண்டிக்கும் வகையில் சசிகலா தவ வாழ்வு வாழ்ந்தவர் என்று கோகுல இந்திரா பேசியது கவனிக்கத் தக்கதாக அமைந்திருக்கிறது.

Exit mobile version