அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு… பட்டியலை ஓகே செய்த அமித்ஷா…
தமிழக அரசியலில் அதிரடி காத்திருக்கிறது….!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,தமிழகம் பக்கம் தன்னுடைய முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது டெல்லி பாஜக தலைமை, குறிப்பாக சமீபத்தில் அண்ணாமலை டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய பின்பு, பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது.
பாஜக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒரு மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர்களாக மூன்று முக்கிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது, வரும் தமிழக தேர்தலை டெல்லி பாஜக தலைமை எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அணுகி வருகிறது என்பதை கணிக்க முடிகிறது, இதற்கு முன்பு ஒரு மத்திய அமைச்சர் மற்ற இருவர் பாஜக மூத்த தலைவராக இருப்பார்கள், ஆனால் இம்முறை மூன்று முக்கிய அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது டெல்லி பாஜக.
இந்த குழு தான் தேசிய ஜனநாயக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து பேச இருக்கிறது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக – பாஜக மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.இன்னும் பாமக, தேமுதிக , போன்ற கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யாமல் இருந்து வருகிறது.பாஜக தலைமை அறிவித்துள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் விரைவில் தமிழக வர இருக்கிறார்கள்,
அவர்கள் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளிடம் பேசி கூட்டணியை உறுதி செய்வார்கள் என்கிறது பாஜக வட்டாரங்கள். மேலும் TTV தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரையும் உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சியில் தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் இந்தியா முழுவதும் உள்ள ஆர் எஸ் எஸ் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி வர இருக்கிறார்கள், வரும் தமிழக சட்டசபை தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் தங்கி ஆர் எஸ் எஸ் தலைவர்கள் தேர்தல் பணியாற்ற இருக்கிறார்கள்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் பாஜக தேசிய செயல் தலைவராக பீகார் மாநில அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார், தேசிய செயல் தலைவராக நியமனம் செய்ய கூடியவரே இதற்கு முன்பு பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டு வந்து இருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் விரைவில் பாஜக தேசிய தலைவராக நியமிக்க படுவார் என்கிறது பாஜக வட்டாரம்.
இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு பாஜக என்ன பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்கிற பரபரப்பு நீடித்து வந்த நிலையில் தற்பொழுது அதற்கான பதில் கிடைத்துள்ளது. தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக தேசிய நிர்வாக பட்டியல் தயார் செய்யும் பணியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
அதில் அண்ணாமலை பெயர் பாஜக தேசிய பொதுச் செயலாளர், தேசிய இளைஞரணி தலைவர் என இரண்டு பொறுப்பில் ஒன்றுக்கு பரிசீலனையில் உள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல் உறுதி படுத்துகிறது. இதில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்க அதிக வாய்ப்புள்ளது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

