ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது’ : மு.க. அழகிரி பரபரப்பு பேச்சு

865

‘ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது, என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள்’ என மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் மு.க.அழகிரி கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம், பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலஸ் என்ற தனியார் மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அழகிரி வீட்டில் இருந்து மண்டபம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டது. பதாகைகளில் கருணாநிதி,மு.க.அழகிரி, துரை தயாநிதியின் படங்கள் இடம்பெற்று இருந்தன.

வீட்டிலிருந்து மண்டபம் வரும் வழிநெடுக தொண்டர்கள் மு.க.அழகிரிக்கு வரவேற்பு அளித்தனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். கோரிப்பாளையத்தில் இருந்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய அழகிரி கூறியதாவது:

‘கருணாநிதியிடம் இல்லாததையும் பொல்லாததையும் கூறி என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். என்றுமே பதவியை எதிர்பார்த்து திமுகவில்இருந்தது இல்லை. எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான். மதுரை நமது கோட்டை. அதையாராலும் மாற்ற முடியாது. கருணாநிதியின் உழைப்பு தான் திருமங்கலம் தேர்தலின் வெற்றிக்கு காரணம். திருமங்கலம் இடைதேர்தல்

திருமங்கலம் தேர்தல் என்றாலே இந்தியாவே பயப்படுகிறது. திருமங்கலம் பார்முலா என்பது எங்களின் உழைப்பு . திருமங்கலம் இடை தேர்தல் பார்முலா என்கிறார்கள் அப்படியொரு பார்முலா கிடையாது. திருமங்கலம் இடை தேர்தலில் யார் ஒருவருக்கும் பணம் கொடுக்கவில்லை.

திருமங்கலம் தேர்தல் வெற்றிக்கு காரணம் பணம் அல்ல. எங்களின் உழைப்புதான் காரணம். திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். திருமங்கலம் தேர்தலில் ஜெயிக்க தவறி இருந்தால் தி.மு.க ஆட்சியே அப்போது கையை விட்டு போய் இருக்கும். இப்போதும்நான் உங்களில் ஒருவன்.

மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்றேன் கருணாநிதி தான் எனக்கு கொடுத்தார். தென் மண்டல அமைப்புச் செயலாளர் ஆன பிறகு திமுகவினர் அனைவரும் நடித்தனர். ஸ்டாலினுக்கு திமுக பொருளாளர் பதவி, துணை முதல்வர் பதிவியை கருணாநிதியிடம் பெற்று தந்தது நான்தான்.

கருணாநிதிக்கு பின்னர் நீதான் திமுக தலைவர் என ஸ்டாலினிடம் தெரிவித்தவன் நான். ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை. பொய் சொல்லவே எனக்கு தெரியாது. எப்போதும் உண்மையே பேசுவேன்.

நான் என்ன தவறு செய்தேன் . ஏன் என்னை திமுகவில் இருந்து நீக்கினீர்கள். திமுகவை பல இடங்களில் வெற்றிபெறச்செய்தேன் இது துரோகமா? எத்தனையோ பேரை அமைச்சர்களாக ஆக்கி உள்ளேன்.ஒருவருக்கும் நன்றி இல்லை. உங்களுக்காக உழைக்க ஒரு தொண்டன் இருக்கிறான் என்றால் அது நான்தான்.

ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக வர முடியாது.என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் வருங்கால முதல்வரே என போஸ்டர்கள் ஒட்டப்பட்டாலும் அவரால் முதல்வராக நிச்சயமாக முடியாது. நான் முதல்வராக ஆசைப்படவில்லை.ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் அடிக்கிறார்கள் .பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு?

உடல் நிலை சரியில்லாத கருணாநிதியை கட்டாயப் படுத்தி திருவாரூரில் போட்டியிட செய்தனர் . கருணாநிதியை மறந்து விட்டு இப்போது திமுகவை நடத்துகின்றனர்.அவருடன் ஒப்பிட்டு ஒரு சிலர் ஸ்டாலினை பேசுகி்ன்றனர். கருணாநிதிக்கு நிகர் அவரே தான். கருணாநிதிக்கு இருக்கும் ஞானம் யாருக்கு இருக்கிறது. அவரை ஸ்டாலின் மிஞ்சி விட்டார் என சிலர் பேசுகின்றனர். கருணாநிதியை மீண்டும் நாம்தான் நினைவுபடுத்த வேண்டும். அவர் நம் உயிர்.

நிச்சயம் விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் நான் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்’ இவ்வாறு கூறினார்.

இறுதியாக பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அழகிரி
‘பத்திரிகையாளர்கள் அனைவரும் திருத்தி எழுதாமல்உண்மையை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்’. என வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here