தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான விஜய் நடித்த லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினாா்.
இந்தப் படத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையிலான காட்சிகள், இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, போலீஸாா் உதவியுடன் குற்றச் செயல்களைச் செய்வது போன்ற பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது சமுதாயத்துக்கு எதிரான நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இதுபோன்ற திரைப்படங்களை தணிக்கைத் துறையினா் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தத் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்.
வன்முறையைத் தூண்டும் வகையில், குற்றவியல் காட்சிகளை திரைப்படமாக்கிய இயக்குநா் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த ராஜா முருகன் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் உள்ளன என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தார்.