அர்ஜூன மூர்த்தி 1960ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ராமசாமி மிகப்பெரிய தொழிலதிபர். சுதந்திர போராட்டவீரரான இவரது தந்தை போக்குவரத்து ஜனதா ரோட்வேஸ் பார்சல் சர்வீஸ் தொழில் தொடங்கி அதன் பின்னர் புதுக்கோட்டை நகராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர். அதேபோல், அர்ஜூன மூர்த்தியும் தொழிலதிபராக இருந்து அரசியல் களத்திற்கு வந்தவர்.
இளநிலை வேதியியல், முதுநிலை சமூக அறிவியல் படிப்பை முடித்த அர்ஜூன மூர்த்தி அதன்பிறகு பேரி நிறுவனத்தில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து உணவு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்த அவர், பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கி பழகினார். தமிழகம் மட்டுமல்லாமல் டெல்லியில் உள்ள பாஜக நிர்வாகிகளுடனும் இவருக்கு அறிமுகம் கிடைத்தது. உணவு தயாரிப்பு நிறுவனத்துக்கு பிறகு தகவல் தொழில்நுட்ப துறையில் கால்பதித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் அர்ஜூன மூர்த்தி. தொழில்நுட்பத் துறையில் அனுபவம் இருந்ததால் பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பரிவர்த்தனை, பண மதிப்பிழப்பு ஆகிய திட்டங்களுக்கு ஆலோசகராக இருந்தார்.
இவருக்கு தமிழகத்தின் திராவிட கட்சிகள்மீது விமர்சனம் உண்டு. கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு கட்சிகளும் மாநிலத்தை சீரழித்துவிட்டதாக கருதிய அர்ஜூன மூர்த்தி, 2019இல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கினார். பாஜக மாநில தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, அறிவுசார் பிரிவில் இவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.