பெற்ற குழந்தையை கைவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்.

308

மதுரை
மதுரையை அடுத்த பனங்காடியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கும், ஜெயஸ்ரீ (வயது 24) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

2019-ம் ஆண்டில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். பல மாதங்கள் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார், என்ன ஆனார் என தெரியாமல் குடும்பத்தினர் இருந்தனர்.

இந்தநிலையில் தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் சரவணன் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால் ஜெயஸ்ரீ எங்கு இருக்கிறார் என போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் சமீபத்தில் அவர் சென்னையில் ஒரு ஓட்டலில் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

பின்னர் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய பள்ளித்தோழியான துர்காதேவியுடன் வாடகை வீட்டில் வசிப்பதாக தெரிவித்தார்.

அப்போது நடந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஜெயஸ்ரீ படித்தார். அங்கு சக மாணவி துர்காதேவியுடன் நெருங்கி பழகியுள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் காதலன்-காதலியை போல இருந்துள்ளனர். பள்ளிப்படிப்பு முடிந்த பின்பும் அவர்களின் பழக்கம் தொடர்ந்தது. இந்த விஷயம் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் திருமணத்திற்கு பின்பும் அவர் துர்காதேவியை மறக்க முடியாமல் தவித்தார்.

கர்ப்பிணியாக இருந்ததால் அவரால் அப்போது தோழியை தேடி செல்ல முடியவில்லை. குழந்தை பிறந்த உடன், சில மாதங்களிலேயே குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு துர்காவை பார்க்க சென்னைக்கு சென்றுவிட்டார். பின்னர் தோழி துர்கா தேவிக்காக சிகை அலங்காரத்தையும், உடையையும் ஆண் போல் மாற்றியுள்ளார். அங்கு அவர்கள் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ஜெயஸ்ரீ தனது தோழியுடன் வசிக்க விரும்புகிறேன். கணவர், குழந்தையுடனோ, பெற்றோருடனோ செல்ல விரும்பவில்லை. தன்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றார். அவருக்கு உரிய வயதாகிவிட்டது என்பதால் அவரின் விருப்பப்படி செல்லலாம் என கோர்ட்டு தெரிவித்தது.

இதையடுத்து கோர்ட்டுக்கு வெளியில் வந்த ஜெயஸ்ரீயை, குடும்பத்தினர் தங்களோடு வந்துவிடுமாறு கெஞ்சி அழைத்தும், அவர் மனம் இறங்கவில்லை. அவர் பெற்றெடுத்த குழந்தையை காண்பித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவர் தன் தோழியுடன் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here