புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறு தானியங்கள் 1½ லட்சம் எக்டேரில் சாகுபடி கலெக்டர் தகவல்

556

புதுக்கோட்டை, புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 758.2 மில்லி மீட்டர் ஆகும். நவம்பர் மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழை அளவான 690.6 மி.மீ பதிலாக 709.2 மி.மீ அளவு மழை பெறப்பட்டுள்ளது. இது இயல்பைவிட 2 சதவீதம் கூடுதலாகும். நவம்பர் மாதத்தில் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு 145 மி.மீ ஆகும். ஆனால் நவம்பர் மாதத்தில் பெறப்பட்ட மழையளவு 130.3 மி.மீ இதுவரை பதிவாகியுள்ளது. 2020-21-ம் ஆண்டில் அக்டோபர் மாதம் முடிய நெல் 68, 479 எக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1, 66, 77 எக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படடுள்ளது. உரங்கள் இருப்பு பயறுவகை பயிர்கள் 1, 805 எக்டேரிலும், எண்ணெய்வித்து 7, 938 எக்டேரிலும், கரும்பு 999 எக்டேரிலும், பருத்தி 29 எக்டேரிலும், தென்னை 10, 843 எக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 208.86 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 45.91 மெட்ரிக் டன் பயறு விதைகளும், நிலக்கடலை 57.71 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 12.97 மெட்ரிக் டன், எள் விதைகள் 4.021 மெட்ரிக் டன் விதைகளும் இருப்பில் உள்ளது. மாவட்டத்தில் தற்போது யூரியா 4, 416 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 923 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2, 895 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 4, 516மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. பயிர் காப்பீடு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறவும். நெல் பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய முனைமத்தொகை எக்டேருக்கு ரூ.1, 130 ஆகும். காப்பீடுத் தவணை தொகை செலுத்த அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 1-ந் தேதி ஆகும். மக்காச்சோளம் பயிருக்கு முனைமத்தொகை எக்டேருக்கு ரூ.889-ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.921-ம், உளுந்துக்கு ரூ.613-ம், எள் பயிருக்கு ரூ.265-ம் காப்பீடு தவணை தொகை செலுத்த காலக்கெடு வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி ஆகும். கரும்பு பயிருக்கு எக்டேருக்கு ரூ.6, 422-ஐ செலுத்த அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். இவ்வாறு அவர் பேசினர். அந்தந்த வட்டாரங்களில் இருந்து விவசாயிகள் காணொலியில் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எம்.சந்தோஷ்குமார், வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here