புதுக்கோட்டை கோவிலில் அன்னதானத்திற்கு பதிலாக பக்தர்களுக்கு பார்சல் உணவு

1004

புதுக்கோட்டை: கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்து கோவில்களை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. பழனி தண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்களில் 24 மணி நேர அன்னதானமும் நடைபெற்று வந்தது. இவை அனைத்தையும் கொரோனா ஊரடங்கு தகர்த்துவிட்டது. தற்போது கோவில்கள் திறக்கப்பட்ட போதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அன்னதான திட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் உள்ள கோவிலில் பக்தர்களுக்கான அன்னதானம் பார்சலில் வழங்கப்படுகிறது. நகர் பகுதியில் உள்ள சாந்தநாத சுவாமி கோவில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு முன்பு இந்த கோவிலில் தினமும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக பக்தர்களை அமர வைத்து இலை போட்டு அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கலவை சாதம் பொட்டலங்களாக தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தயிர் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் மற்றும் அதனுடன் ஊறுகாய் பாக்கெட்டும் இணைத்து கொடுக்கப்படுகிறது. இதற்காக கோவில் வளாகத்தில் உணவு தயார் செய்யும் ஊழியர்கள் மதிய அன்னதானமாக இதனை பார்சலில் கட்டி பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக நின்று வாங்கி செல்வதோடு, இதற்கான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here