புதுக்கோட்டையில் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்.கார்டு விவரங்களை பெற்று அரசு ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடி, இணையவழி குற்றங்கள் அதிகரித்துள்ளது. அதிலும் வங்கியில் இருந்து பேசுவதாக மர்மநபர்கள் கூறி, ஒருவரது செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களது வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய குறியீடு எண் ஆகியவற்றை பெற்று அவர்களது பணத்தை ஆன்லைன் வழியாக திருடிவிடுகின்றனர். இது போன்ற சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் அரசு ஊழியர் ஒருவரிடம் மர்மநபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணத்தை மோசடி செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது35). அரசு ஊழியரான இவரது செல்போன் எண்ணிற்கு சம்பவத்தன்று மர்மநபர் ஒருவர்,தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். மேலும் பால்ராஜின் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண் உள்ளிட்டவிவரங்களை கேட்டு பெற்றுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் குறைந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்த பால்ராஜ் அதிர்ச்சியடைந்தார். மர்மநபர் செல்போனில் பேசி பணத்தை நூதனமுறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.