புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 409 மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுத திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்லும் 63 மாணவ மாணவிகளை ஓயாத அலைகள் என்ற சமூக நல அமைப்பினர் தங்களது சொந்த செலவில் முக கவசம், கிருமிநாசினி, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாணவர்களுக்கு வழங்கி தங்களது வாகனத்தில் தேர்வு மையங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில் தமிழகத்திலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 409 மாணவ மாணவிகள் இன்று திருச்சி, மதுரை,தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்கனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் தகுந்த ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் வழங்கி தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வழி வகை செய்து இருந்தனர்.
இதனிடையே உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் நீட் தேர்வை எழுதுவதற்கு கூட சிரமத்திற்கு உள்ளாகும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் 63 பேரை ஓயாத அலைகள் என்ற சமூக அமைப்பினர் புதுக்கோட்டையில் உள்ள ஓர் இடத்திற்கு வரவழைத்து அந்த மாணவர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கிருமிநாசினி, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு அவர்களை தங்களது சொந்த வாகனத்தில் திருச்சியில் உள்ள தேர்வு மையங்களுக்கு அழைத்துச் சென்றனர்.இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இதுகுறித்து தேர்வு எழுதச் செல்லும் மாணவ மாணவிகள்,முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத இந்த சூழலில் ஓயாத அலைகள் என்ற அந்த அமைப்பினர் தங்களை அவர்களது சொந்த செலவில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,தாங்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது நிச்சயம் தேர்வில் வெற்றி பெறுவோம் என்றும் கூறினர்.
இதுகுறித்து ஓயாத அலைகள் அமைப்பைச் சேர்ந்த அருண்மொழி கூறுகையில்: நீட் தேர்வை தங்கள் அமைப்பு தொடர்ந்து எதிர்த்து வந்தாலும் தற்போதைய சூழலில் தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவிகள் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தங்களது சொந்த செலவில் அவர்கள் தேவையான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும்,கடந்த ஆண்டு இதே போல் முப்பதிற்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவிகளை கேரளாவில் உள்ள தேர்வு மையங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து விட்டதாகவும், இந்த ஆண்டும் அதே போல் ஏழை மாணவிகளுக்காக இந்த உதவியை செய்வதாகவும் கூறினார்.