நெல்லை கண்ணன் ஒரு பார்வை!

345

தமிழறிஞர் நெல்லை கண்ணன்:
வாழ்க்கைப் பயணம்

தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது (77).

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது இல்லத்தில் காலமானார்.

ந.சு. சுப்பையா பிள்ளை இலக்குமி அம்மையார் ஆகியோரின் 4-வது மகனாக கடந்த 1946 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நெல்லை கண்ணன். தகப்பனார் குடும்பம் நெல்லையை பூர்விகமாகக் கொண்டது.

விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் மீது தனியாத ஆர்வம் கொண்டவர். பாரதி பாடல்கள், தமிழ் இலக்கிய நூல்கள் என அனைத்தையும் கற்று தேர்ந்தவர். பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் ஏராளமான பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர். அரசு தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக பலமுறை செயல்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், இளம் வயது முதலே கட்சியில் இணைந்து  பணியாற்றியவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போது இவருக்கு திருநெல்வேலி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இரு முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

 காங்கிரஸ் கட்சிக்காக பல்வேறு மேடைகளில் பிரசாரம் மேற்கொண்டவர். சிவாஜிகணேசன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தபோது, அவர் வருகைக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றியவர்.

பிரதமராக ராஜீவ் காந்தி இருந்த நிலையில், பிரசாரத்திற்காக அவர் நெல்லை வருகை தந்தபோது இவரது வீட்டில் மதிய உணவு எடுத்துக்கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர். 

1992 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்த தாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரால் அ.தி.மு.கவில் நீண்டநாட்கள் நீடிக்க முடியவில்லை. ஓர் ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். அரசியலில் மிகப் பெரிய பதவிக்கு அவரால் வர முடியவில்லை.

தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்த அவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். இவரது பேச்சாற்றலும், நினைவாற்றலும், பேச்சு இலக்கிய நயமும் சிறப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here