முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பெரிய கோவில்கள் திறப்பு, பேருந்து போக்குவரத்து குறித்து இக்கூட்டத்திற்குப் பின் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக 6 வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இந்நிலையில் மாவட்டங்களில் நிலவும் கொரோனா நிலவரங்கள் குறித்து ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதேபோன்று, நோய்த்தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடனும் முதலமைச்சர் நாளை கலந்தாலோசிக்க உள்ளார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்கள் திறப்பு, பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதித்த பின் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கிடையேயும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதால் அதுகுறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்படுமா அல்லது பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்பதும் இக்கூட்டத்திற்குப் பின் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.