நான் ஜெயிலுக்கு செல்ல தயார் விஜய், விஷ வளையத்தில் சிக்கி இருக்கிறார் – எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

1039

சென்னை, தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கி உள்ள விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி வருமாறு:- விஜய் மக்கள் இயக்கம் என்பது நான் ஆரம்பித்த அமைப்பு. அதை அரசியல் கட்சியாக பதிவு செய்ய யாரிடமும் அனுமதி கேட்க தேவை இல்லை. விஜய் இப்போது உச்ச நட்சத்திரமாக மாறினாலும் எனக்கு குழந்தைதான். அவருக்கு என்ன நல்லது செய்ய வேண்டுமோ அதை ஒரு தந்தையாக செய்து கொண்டு இருக்கிறேன். எதையும் அவரிடம் கேட்டு செய்ய வேண்டும் என்று இல்லை. ரசிகர் மன்றம் ஆரம்பித்தபோது அவரிடம் கேட்கவில்லை. அவருக்கு எது நல்லதோ அதை செய்கிறேன். அவருக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்பா செய்தது நல்லதுதான் என்று பிறகு புரிந்து ஏற்றுக்கொள்வார் என்பது எனது நம்பிக்கை. தனது பெயர், புகைப்படம் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் கூறியிருக்கிறார். நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்ப நினைத்தால் அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தால் அது வரலாறு. பெருமைதான். நான் நல்லதுதான் செய்து இருக்கிறேன். எதிர்விளைவு பற்றி சிந்திக்கவில்லை. நான் வெளிப்படையான மனிதன். நான் ஆரம்பித்தது எதிலும் தோற்றது இல்லை. கடவுள் இருக்கிறார். சினிமா பாதிக்கும் என்பதால் அவரை கட்சியில் இணைக்கவில்லை. 10 வருடத்துக்கு முன்பே விஜய்யிடம் நான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறியிருக்கிறேன். அரசியல் கட்சி ஆரம்பித்து மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தேன். ஆரம்பித்து இருக்கிறேன். வருகிற தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிந்திக்கவில்லை. 8 மாதமாக திட்டமிட்டு இப்போது கட்சியை பதிவு செய்து இருக்கிறேன். தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. அதாவது விஜய் ஒரு விஷ வலையில் சிக்கி இருக்கிறார். அதில் இருந்து அவரை வெளியே கொண்டு வருவேன். கூட இருப்பவர்கள் குழி பறிக்கிறார்கள். நான் அவரோடு இருந்தால் பிழைப்பு நடத்த முடியாது என்று நினைத்து என்னை பற்றி தவறாக சொல்லி அவருடன் நெருங்க விடாமல் செய்கிறார்கள். நல்லவன் மாதிரி நடிக்கின்றனர். விஜய்க்கு விரைவில் உண்மை தெரியவரும். அப்பா நல்லதுதான் செய்து இருக்கிறார் என்று அப்போது உணர்வார். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here