சென்னை, இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இந்த சூழலில் நடிகை மீனாவின் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மீனாவின் கணவர் வித்யாசாகர், தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.