நடிகர் விஜய் கட்சியின் மாநாடு பணிகள்?.. தவெக அனுமதி பெறுவதில் இழுபறி!
சமீபத்தில் புதிய கட்சியை ஒன்றை தொடங்கிய பிரபல நடிகர் விஜய் தனது கட்சியை டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதில் இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தான் கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி புதியதாக் கட்சி தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தனது கட்சிக்கு, ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டி இருப்பதாக அப்போது கூறியிருந்தார்.
இதற்காக அன்றைய தினமே புஸ்ஸி ஆனந்த், டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் சென்று முறைப்படி கட்சியைப் பதிவு செய்வதற்காக வேலைகளில் இறங்கி இருந்தார். அங்கே அவர் செய்தியாளர்களிடம் அது பற்றி விளக்கம் அளித்திருந்தார்.
சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பார் எனப் பலரும் எதிர்பார்த்து வந்தனர். அதற்கான அறிகுறிகள் அவரது படத்தின் ஆடியோ விழாக்களில் தெரிந்தன. அதைப்போலவே அவர் கட்சி தொடங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் எனப் பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அவரது வயது அவரது உடல்நிலையும் அதற்கு இடம் தரவில்லை.
விஜய் முழுவதுமாக நடிப்பை விட்டு விலகி, அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்று அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயர் விவாதத்தைக் கிளப்பியது. ‘வெற்றிக் கழகம்’ என்பதே இலக்கணப்படி சரி என தமிழ் ஆர்வலர்கள் அவரைக் கேள்வி கேட்டனர். ‘தமிழ்நாடு’ தான் மாநிலத்தின் பெயர். இவர் ஏன் ‘தமிழகம்’ என்று சொல்கிறார். ஆகவே, இவர் தேசிய நிலைப்பாட்டைக் கட்சியின் மூலம் நிலை நிறுத்த பார்க்கிறார் என்று மற்றொரு தரப்பு விவாதத்தில் கூட பேசும் பொருளாகியும் விவாதித்தனர்.
ஆனால், இந்தச் சர்ச்சைகளைத் தொடர விடாமல், கட்சியின் பெயரில் முறைப்படி ‘க்’ சேர்த்து மாற்றி அமைத்தார் விஜய்.
அதன்பின்னர் கடந்த பிப்ரவரி 19 தேதியன்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி உட்கட்டமைப்பை உருவாக்குவதற்காக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து மார்ச் 8 தேதியன்று கட்சிக்கான உறுப்பினர்களைச் சேர்க்கச் செயலியை அறிமுகப்படுத்தினார்.
ஆனால், மக்களவைத் தேர்தல் காலத்தில் அவரது கட்சி மாபெரும் அமைதியைக் கடைப்பிடித்தது. அவர் மத்திய அரசு பற்றியும் மோடி அரசியல் பற்றியும் வாய் திறக்கவே இல்லை.
இந்நிலையில்தான் நடிகர் விஜய் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதில் இழுபறி நீடித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே அவசர அவசரமாகக் கட்சியின் பெயரை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தையும் நாடி இருந்தது விஜய் தரப்பு.
அதற்கான பணிகளைச் செய்வதற்காக புஸ்ஸி ஆனந்த் டெல்லி போனார். அங்கே கட்சியைப் பதிவு செய்வதற்கான முதற்கட்ட வேலைகளில் இறங்கினார். ஆனால், விஜய் தரப்பு கட்சியைப் பதிவு செய்வதற்காகச் சென்ற சில வாரங்களிலேயே மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆகவே, அந்த வேலைகளில் மிகத் தீவிரமாக இந்திய தேர்தல் ஆணையம் இறங்கிவிட்டது. இதனிடையே விஜய், 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவாரா? மாட்டாரா? என ஒரு பக்கம் விவாதம் கிளம்பியது. அதனையடுத்து ‘தங்களின் இலக்கு 2024 அல்ல, 2026 தான்’ என ஒரு விளக்கமும் விஜய் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான வேலைகளைத் தொடங்கினார். அதற்காகச் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தார். அடுத்தடுத்து கட்சி பணிகள் வேகம் எடுத்தன. மேலும் நிர்வாகிகளை அழைத்து சென்னை அருகில் உள்ள பனையூரில் ஆலோசனையையும் நடத்தினார்.
ஆனால், தேர்தல் காலம் வந்தது முதல் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். கட்சி முறையாகப் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை விஜய் எடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் முறையாகப் பதிவுச் செய்து, அதற்கான அனுமதி கிடைத்த பின் வேலைகளைத் தொடங்கலாம் என உத்தேசித்துள்ளாராம் விஜய்.
இதனிடையே டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளை அணுகி விளக்கம் கேட்டுள்ளது விஜய் தரப்பு. அவர்கள் தேர்தல் முடிந்த பிறகுதான் புதிய கட்சிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு எப்படி ஜூன் மாதம் இறுதி வரை ஆகிவிடும். பொறுத்திருங்கள் என அதிகாரிகள் ஆலோசனை கொடுத்துள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.
விஜய் தனது கட்சிக்கான விண்ணப்பத்தைக் கடந்த பிப்ரவரி மாதமே கொடுத்துவிட்டார். ஆனால், விண்ணப்பம் குறித்து எந்தவித பதிலும் இல்லாததால் கட்சி பணிகளைத் தொடர்ந்து செய்வதில் பலன் இல்லை என்பதால், பல்வேறு கட்சி பணிகள் அப்படியே முன்னேற்றம் கொள்ளாமல் முடங்கிப் போய் நிற்கிறது என்கிறார்கள் அவரது கட்சியினர்.
கட்சிக்கான சட்ட ரீதியான அனுமதி கிடைத்துவிட்டால், மாநாட்டைக் கூட்டி தங்களின் பலத்தைக் காட்டலாம் என்ற முடிவிலிருந்த விஜய், இப்போது அந்தத் திட்டத்தையும் தள்ளிப் போட்டுள்ளாராம்.
அப்படிக் கட்சிக்கான அனுமதி தள்ளிப் போகும் பட்சத்தில், அந்த இடைவெளியில் வேறு படங்கள் ஏதாவது முடித்துக் கொடுத்து விடலாமா? அல்லது கடைசி படம் என கொடுத்த வாக்குறுதியை அப்படியே தொடரலாமா? என்று மன உளைச்சலில் விஜய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதற்குக் காரணம், ‘கில்லி’ ரீ ரிலீஸ். அது எதிர்பாராத விதமாகச் சக்கைப் போடு போட்டு வருகிறது. சொல்லப் போனால் ‘லியோ’ வசூலையே தாண்டி உள்ளது. இந்த ரெக்கார்ட் பிரேக் ஒரு பக்கம், திரை ரசிகர்களின் வேண்டுகோள் மறு பக்கம். இந்த இரண்டும் அவரது மனதைக் கொஞ்சம் மாற்றி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எஇதற்கு எல்லாம் சரியான பதிலை விஜய்தான் சொல்ல வேண்டும். அதுவரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. என்று தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.