தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை விட 796 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், இதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற மூன்று பேர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள ஸாருகலா கோவை நேஷனல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்து இந்த ஆண்டு முதுகலை பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ரவி சுப்பிரமணியன் சொந்தமாக செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது தாய் சாந்தி பூலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 19 வயதில் சந்துரு என்ற தம்பி உள்ளார். தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியுள்ள ஸாருகலாவிற்கு வெங்காடம்பட்டி ஊராட்சி பகுதியைச் சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர்.