தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா பொக்கோ, கொல்கத்தாவில் நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது என்ற தமிழ்நாட்டின் முடிவை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வங்காளத்தின் எதிர்காலம் காப்பாற்றப்படும் வகையில் தமிழ்நாட்டைப் பின்பற்றி முடிவெடுக்குமாறும், குடியரசுத் தலைவர் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் என்றும், வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
“நீட் என்பது வங்காளத்திற்கு எதிராக, வங்காள மக்களுக்கு எதிராக, மாநில கல்விக்கு எதிராக, ஏழைகளுக்கு எதிராக, நடுத்தர வர்க்கத்திற்கு எதிராக, கிராமப்புற மக்களுக்கு எதிராக, சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் தனது சொந்தத் தாயகத்தில் மருத்துவராக வேண்டும் என்ற வங்காள மக்களின் கனவுகளை அழிக்கும்” என்றும், ”இந்தி பேசும் மாநிலங்களில் இருக்கும் நீட் பயிற்சி மையங்கள், தேசியத் தேர்வு முகமையும் (National Testing Agency) சிபிஎஸ்இ -யும் கூட்டு வைத்துக்கொண்டு தமிழ்நாடு, மேற்குவங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவைத் திருடுகிறது” என்றும் ”நமது குழந்தைகள் டெல்லிக்கும், இந்தி மொழிக்கும் அடிமைப்படப் பிறந்தவர்கள் அல்லர், எது நம்முடையதோ, அது நம்முடையதே! வங்காள மக்களின் வாய்ப்புகளை வேரற்ற ஒட்டுண்ணிகளால் திருட முடியாது. இது வங்காளத்தின் எதிர்காலத்திற்கானப் போராட்டம்” என்று பேசினார் பங்ளா பொக்கோ அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் கார்கா சாட்டர்ஜி.
மேலும், “வரவிருக்கும் காலங்களில், தேசிய தேர்வு முகமை அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் எடுத்துக்கொண்டு, நர்சிங், நீதிச் சேவை உள்ளிட்ட அனைத்தையும் இந்தியமயமாக்கும், இதனால் இந்தி அல்லாத மாநிலங்கள் அனைத்தும் இந்தி ஏகாதிபத்தியத்தின் நிரந்தரக் காலனிகளாக வேண்டும் என்று டெல்லி விரும்புகிறது. 2024 தேர்தல் போர் என்பது வெறுமனே பா.ஜ.க.வை தூக்கியெறிய மட்டும் அல்ல, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நாணயம் தவிர்த்து, கல்வி, சுரங்கங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் டெல்லியிடமிருந்து மாநிலங்கள் மீட்டெடுப்பதற்கான போராட்டமாகவும் இருக்க வேண்டும்” என்றும் கார்கா சாட்டர்ஜி பேசினார்.
பங்ளா பொக்கோ அமைப்பின் தலைமைக்குழு உறுப்பினரான டாக்டர் அரிந்தம் பிஸ்வால் பேசுகையில், “இந்த பிரச்சனையில் வங்காளத்தில் செயல்படும் ஒவ்வொரு கட்சியும் தமிழ்நாட்டைப் பின்பற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்படும். வங்காளத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாங்கள் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆளுமைகள் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு முன்மாதிரியாக தமிழ்நாடு விளங்குவதாகவும், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் சட்டப்போராட்டத்துக்கு அனைத்து மாநிலங்களும் வலுசேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்ததோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தி பேசாத மாநிலங்களின் உறுதிமிக்க தளபதி என்றும், அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கொள்கை வாரிசு” என்றும் புகழாரம் சூட்டினர்.
ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த அனிதா உள்ளிட்ட பலருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.