தமிழக சட்டசபை கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த முடிவு – கலைவாணர் அரங்கத்தில் சபாநாயகர் ஆய்வு

922

சென்னை, தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ந் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர் 6 மாத இடைவெளியில் கூட்டப்பட வேண்டும். அதன்படி, வரும் செப்டம்பர் 23-ந் தேதிக்குள் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும். இம்மாதம் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதோடு, சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஊரடங்கு நீடிக்கவில்லை என்றாலும், முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவை கண்டிப்பாக நீடிக்கப்படும் என்றே தெரிகிறது. எனவே சென்னை கோட்டையில் உள்ள சட்டசபை மைய மண்டபத்திலும் சமூக இடைவெளியை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதனால் அங்கு அனைவருமே அமர இடமில்லாமல் போய்விடும். எனவே சட்டசபை கூட்டத்தொடரை வேறிடத்தில் நடத்தலாமா?. அதற்கு சென்னையில் எது உகந்த இடம்? என்பது பற்றி உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மாற்றிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் நேற்று சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு வந்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் அவர்களை அழைத்து சென்று 3-ம் தளத்தில் இருக்கும் ஆயிரம் இருக்கைகள் போடக்கூடிய அரங்கத்தை காட்டினர். அதில் சமூக இடைவெளியுடன் எத்தனை பேரை அமர வைக்க முடியும்? அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு எங்கு இடம் ஒதுக்குவது என்பது பற்றி அதிகாரிகளுடன் சபாநாயகர் ப.தனபால் ஆலோசித்தார். அதுதவிர, சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கான அலுவலகங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றுக்கும் இடவசதி உள்ளதா? என்பதையும் சபாநாயகர் ப.தனபால் ஆய்வு செய்தார். மேலும், சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்போது, மக்களின் வருகை, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர அங்கு வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் ஆராய்ந்தார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய சபாநாயகர் ப.தனபால், “கொரோனா காரணமாக சட்டமன்றத்தை கூட்டுவதற்கு தகுந்த இடம் வேண்டும் என்று எண்ணி தற்போது கலைவாணர் அரங்கத்தை ஆய்வு செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை. வேறு இடங்களும் ஆய்வு செய்யப்படுமா? என்பது பின்னர் தெரிவிக்கப்படும்” என்று கூறினார். கலைவாணர் அரங்கத்தைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம், நேரு விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here