தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வரும் என்று கூறுவது அனைத்தும் வதந்தியே என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அப்படி வரும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து புயல்கள்!!! உண்மை என்ன?
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றம் காரணமாக புயல்கள் வரிசையாக உருவாகி வருகின்றது. முதலில் வங்க கடலில் “நிவர்” என்று ஒரு புயல் உருவாகியது. இந்த புயல் கடந்த மாதம் தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனை அடுத்து 2 நாட்களில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலில் உருவாகியது.
இந்த புயல் கடந்த 2 ஆம் தேதி கன்னியாகுமாரி மற்றும் கேரளா பகுதிகளை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த புயல் வங்கக்கடலிலேயே வலுவிழந்து விட்டது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. தொடர்ச்சியாக பெய்யும் கனமழையால் பல ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்கள் சேதம் ஆகி உள்ளது. வங்க கடலில் இந்த புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
தவறான தகவல்களை நம்ப வேண்டாம்
தற்போது தமிழகத்தை மேலும் 5 புயல்கள் தாக்கும் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகம் ஒரு புயல் மாநிலமாக மாறியுள்ளது என்றும் கூறப்பட்டு வருகின்றது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
அவர் கூறுகையில், “தமிழகத்தில் அடுத்து 5 புயல்கள் தாக்கும் என்பது ஒரு வதந்தியே. இது போன்ற தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம். இவை அனைத்தும் போலியான செய்திகளாக தான் இருக்கும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.